விமான சாகசங்களுடன் தொடங்கியது பெங்களூருவில் 11–வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பங்கேற்றார்

பெங்களூருவில் 11–வது சர்வதேச விமான தொழில் கண்காட்சியை ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தொடங்கி வைத்தார். விமான சாகசங்களுடன் இந்த கண்காட்சி தொடங்கியது.

Update: 2017-02-14 22:00 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் 11–வது சர்வதேச விமான தொழில் கண்காட்சியை ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தொடங்கி வைத்தார். விமான சாகசங்களுடன் இந்த கண்காட்சி தொடங்கியது.

ராணுவ தளவாடங்கள்

பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு சார்பில் 11–வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி தொடக்க விழா பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:–

“ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிக ஊக்கம் அளிக்கிறது. இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படுவதன் மூலம், சொந்த நாட்டிலேயே மிக சிறந்த ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் ராணுவம் மற்றும் விமானவியல் துறையில் நிறைய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நடைமுறைகளை எளிமைப்படுத்த...

இந்த திசையில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்(மேக் இன் இந்தியா) கீழ் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலேயே ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான அனைத்து உதவி, ஒத்துழைப்பு வழங்க அரசு தயாராக உள்ளது. இதற்காக ராணுவ ஆராய்ச்சி நிதியகத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்திய சுற்றுச்சூழல் தோழனாக ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது எங்களின் நோக்கம் ஆகும்.

இவ்வாறு மனோகர் பாரிக்கர் பேசினார்.

விமானவியல் பூங்கா

அதைத்தொடர்ந்து விமானத்துறை மந்திரி அசோக் கஜபதிராஜூ பேசும்போது, “இந்திய பயணிகள் விமான போக்குவரத்து துறை உலகிலேயே அதிவேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இந்திய விமான போக்குவரத்து துறை 7–வது இடத்தில் உள்ளது. 2022–ம் ஆண்டுக்குள் இந்தியா 3–வது இடத்துக்கு வரும். இந்தியாவில் பொதுமக்கள் விமானங்களில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் நமது நாட்டில் சிறிய நகரங்களில் விமான நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய கர்நாடக தொழில்துறை மந்திரி தேஷ்பாண்டே, “இந்த சர்வதேச விமான தொழில் கண்காட்சிக்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் உதவிகளை மாநில அரசு தொடர்ந்து வழங்கும். தேவனஹள்ளி அருகே ரூ.15 ஆயிரம் கோடியில் விமானவியல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்“ என்றார். இந்த மத்திய இணை மந்திரி ஜெயந்த்சின்கா, ராணுவம் உள்பட முப்படைகளின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விமானங்கள் சாகசம்

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து போர் விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தின. இந்தியாவின் தேஜஸ் போர் விமானம், சாரங்க், சீதா, துருவ் உள்ளிட்ட போர் ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமடித்தும், குறுக்கும் நெடுக்குமாகவும், நேருக்கு நேராகவும் மோதும் வகையிலும் பறந்து சாகசங்களை புரிந்தன. இது பார்வையாளர்கள் மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது.

இது தவிர மிக் போர் விமானம், ரபேல், சுகோய் உள்பட பல்வேறு வெளிநாட்டு போர் விமானங்களும் சாகசங்களை புரிந்தன. இதன் மூலம் அந்த விமானங்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியது. இந்த விமானங்கள் வானத்தில் வெண் புகையை கக்கியபடி வளைந்தும், நெளிந்தும் பறந்து கோலமிட்டது பார்வையாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

800–க்கும் அதிகமான நிறுவனங்கள்

இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, ரஷியா, இலங்கை, சீனா உள்பட பல்வேறு நாடுகளின் விமானங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்று உள்ளன. 800–க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் தங்களின் அரங்குகளை அமைத்துள்ளன.

இந்த விமான தொழில் கண்காட்சி வருகிற 18–ந் தேதி வரை நடக்கிறது. இந்த கண்காட்சி நடைபெறும் நாட்களில் பொதுமக்களுக்காக விமான சாகச நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை காண லட்சக்கணக்கான வெளிநாட்டு பார்வையாளர்கள் வருகிறார்கள். இந்த கண்காட்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உரிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே பாதுகாப்பு சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் செய்திகள்