வருவாயில் தன்னிறைவு பெற வேண்டுமானால் புதிய தொழிற்சாலைகள் தொடங்க வேண்டியது அவசியம் அமைச்சர் கந்தசாமி பேச்சு

புதுச்சேரி மாநிலம் நிதி வருவாயில் தன்னிறைவு பெற வேண்டுமானால் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டியது அவசியம் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Update: 2017-02-13 23:00 GMT
பயிற்சி வகுப்பு தொடக்கம்

பிரதம மந்திரியின் தொழில் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சூரியஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கும் திட்டம் புதுவை மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து, பயிற்சி வகுப்பில் சேர தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அதற்கான அனுமதி கடிதத்தை வழங்கி அமைச்சர் கந்தசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

பயிற்சி பெறலாம்

படித்து முடித்து வேலை கிடைக்காமல் உள்ளவர்களும், உயர்கல்வி பெற கல்லூரிக்கு செல்ல முடியாதவர்களும் இதில் சேர்ந்து பயிற்சி பெற்றால் சுலபமாக வேலைவாய்ப்பை பெறலாம். 3 மாத கால அளவில் அளிக்கப்படும் இந்த பயிற்சியின் மூலம் 70 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியும். இதன் மூலம் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்ற திட்டத்தை சுலபமாக நிறைவேற்ற முடியும். எனவே இந்த பயிற்சியில் சேர்ந்தவர்கள் இதனை முழுமையாக நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த பயிற்சிக்காலத்தில் அவர்களுக்கு ஊக்கத் தொகையும் அளிக்கப்படும்.

புதிய தொழிற்சாலைகள் அவசியம்

புதுச்சேரி மாநிலம் வருவாயில் தன்னிறைவு பெற வேண்டுமானால் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டியது அவசியமாகும். படித்த இளைஞர்கள் சுயதொழில் தொடங்க முன்வரவேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த, அரசு 45 சதவீத மானிய உதவி வழங்குகிறது.

மத்திய அரசு திடீரென 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், புதுச்சேரி மாநிலத்துக்கு சுமார் 200 கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. அந்த வருவாய் இழப்பு நிலை தற்போதும் தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை ஆணையாளர் வல்லவன், தொழில் திறன் மேம்பாட்டு திட்ட இயக்குனர் சாரங்கராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்