அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு கலெக்டரிடம், கார் டிரைவர் புகார் மனு

அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பதாக கலெக்டரிடம், கார் டிரைவர் புகார் மனு கொடுத்தார். 10 ரூபாய் நாணயம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார

Update: 2017-02-13 22:45 GMT

சேலம்,

அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பதாக கலெக்டரிடம், கார் டிரைவர் புகார் மனு கொடுத்தார்.

10 ரூபாய் நாணயம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் உதயகுமார் என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் கையில் 10 ரூபாய் நாணயங்கள் வைத்திருந்தார். இதையடுத்து அவர் கலெக்டர் சம்பத்தை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:–

நான் கடந்த 10–ந் தேதி சேலம் பழைய பஸ்நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையத்துக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தேன். அப்போது நான், அந்த பஸ் கண்டக்டரிடம் 10 ரூபாய் நாணயம் கொடுத்து பயண சீட்டு கேட்டேன். அதற்கு அவர் என்னிடம் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்றும், இதை தங்களுடைய காசாளர் வாங்க மறுப்பதாகவும் கூறி நாணயத்தை வாங்க மறுத்தார்.

இதேபோல் மற்ற அரசு பஸ்களிலும் 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது. எனவே அரசு பஸ்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க கலெக்டர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.

அகற்ற வேண்டும்

வக்கீல்கள் சமூக நீதி பேரவையை சேர்ந்த 10–க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ‘தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை 6 மாதத்திற்குள் அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் சேலம் மாவட்டத்தில், நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை இதுவரை அதிகாரிகள் அகற்றவில்லை. எனவே ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர்.

மேலும் செய்திகள்