புதுவையில், இதுவரை 80 ஆயிரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

புதுவையில் இதுவரை 80 ஆயிரம் குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2017-02-13 22:00 GMT

புதுச்சேரி,

புதுவையில் இதுவரை 80 ஆயிரம் குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தகவல் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி

பல ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளின் உயிருக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருந்த பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் நமக்கு தற்போது முற்றிலும் சவாலாக உள்ள தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இந்திய மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

புதுவை மாநிலத்தில் கடந்த 6–ந் தேதி முதல் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் இந்த ஊசி போட வேண்டும். முதல் கட்டமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ–மாணவிகளுக்கு இந்த ஊசி போடப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையம், துணை சுகாதார மையம் மற்றும் சிறப்பு மையங்களில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த ஊசி வருகிற 28–ந் தேதி வரை போடப்படும்.

80 ஆயிரம் குழந்தைகள்

புதுவை மாநிலத்தில் இந்த தடுப்பூசி 3லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு போட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 80 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை பெரிய அளவிலான பின்விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. பசி, பயம் காரணமாக மயக்கம், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் குணமடைந்தனர்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளிவரும் தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. கடந்த பல ஆண்டுகளாக புதுவை மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ளது. எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களும் இந்த ஊசியை போட்டுக்கொள்ளலாம். இது மிகவும் தரமான ஊசி ஆகும்.

இவ்வாறு ராமன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடுவது தொடர்பாக மாநில செயலாக்க குழு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சுகாதாரத்துறை இயக்கக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், பள்ளி கல்வித்துறை இயக்குனர் குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்