மாமல்லபுரம் கடற்கரையில் டீசல் படிமம் கரை ஒதுங்கியது
மாமல்லபுரம் கடற்கரையில் டீசல் படிமம் கரை ஒதுங்கியது புராதன சின்னங்கள் மாசுபடும் அபாயம்
மாமல்லபுரம்
எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதிய விபத்தில் கடலில் கொட்டிய டீசல் படிமம் காற்று திசை மாறி வீசுவதால் மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதனால் புராதன சின்னங்கள் மாசுபடும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கியதுஎண்ணூர் துறைமுகம் அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதிய விபத்தில், சேதம் அடைந்த ஒரு சரக்கு கப்பலில் இருந்த டீசல் கடலில் கொட்டி பரவியது. சென்னை கடற்கரை பகுதிகளில் இந்த டீசல் படிமம் கரை ஒதுங்கியது. திருவொற்றியூர் பாரதியார் நகர் கடல் பகுதியில் அதிகளவில் படிந்த டீசல் படிமம் போராடி அகற்றப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முதல் காற்று திசை மாறி வீசுவதால் கடலில் மிதந்த டீசல் படிமம் மாமல்லபுரம் நோக்கி மிதந்து வந்தன. கடற்கரை கோவில் அருகில் வடக்கு பக்க கடற்கரை பகுதியில் இந்த டீசல் படிமங்கள் ஒதுங்கி வருகின்றன. இதனால் அப்பகுதி கடற்கரையில் டீசல் படிமங்கள் ஆங்காங்கே சிதறிய நிலையில் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.
மாசுபடும் அபாயம்டீசல் படிமங்கள் கரை ஒதுங்கிய பகுதியில் குறிப்பாக உலகப்புகழ் பெற்ற கடற்கரை கோவில் அருகில் உள்ளதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
எனவே கரை ஒதுங்கும் டீசல் படிமங்களை உடனடியாக அகற்றி புராதன சின்னங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர்.