மழைபெய்ய வேண்டி கோத்தர் இன பெண்கள் தண்ணீர் பானைகளுடன் ஊர்வலம்

ஊட்டி அருகே மழை பெய்ய வேண்டி கோத்தர் இன பெண்கள் நேற்று தண்ணீர் பானைகளுடன் ஊர்வலமாக சென்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Update: 2017-02-13 22:30 GMT
ஏமாற்றிய பருவமழை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து விட்டு நின்று விட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. மழை பொய்த்து போனதால் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் நீர்மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் மழை வேண்டி ஆங்காங்கே மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஊட்டி அருகே உள்ள கொல்லிமலையில் வசிக்கும் கோத்தர் இன மக்கள் பருவமழை வேண்டி நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கோத்தர் இன பெண்கள் ஊர்வலம்

இதில் பெண்கள் அனைவரும் கொல்லிமலையில் உள்ள “அய்யனோர் அம்மனோர்” கோவிலில் ஒன்றாக இணைந்து வழிபட்டனர். பின்னர் தங்களது வீடுகளில் இருந்து மண் பானைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் புனித இடமாக கருதும் தண்ணீர் ஊற்று அமைந்துள்ள இடத்திற்கு சென்றனர். அங்கு கோத்தர் இன பெண்கள் ஊற்று தண்ணீரை தங்களது மண் பானைகளில் பிடித்துக்கொண்டு அனைவரும் ஊர் வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு தாங்கள் கொண்டு வந்த தண்ணீரை வைத்து வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள மரங்களுக்கு தாங்கள் கொண்டு வந்த தண்ணீரை ஊற்றினர். இதன் மூலம் பருவமழை பெய்யும் என்பது அவர்களது நம்பிக்கை. இதில் கோத்தர் இன பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்