குழாய் சேதமடைந்ததால் குடிநீர் வினியோகம் பாதிப்பு: பெண்கள் சாலை மறியல்

குழாய் சேதமடைந்ததால் குடிநீர் வினியோகம் பாதிப்பு: சோழவந்தானில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Update: 2017-02-13 22:00 GMT

சோழவந்தான்,

குடிநீர் குழாய் சேதமடைந்ததால் கடந்த 15 நாட்களாக சோழவந்தானில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை ஆற்றுக்குள் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு பேட்டை பகுதியில் உள்ள 6 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

சோழவந்தான் – பள்ளப்பட்டி சாலையில் உள்ள தேனூர் கால்வாயில் புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அந்த பணியின் போது குடிநீர் குழாய் முற்றிலும் சேதமானது. இதனால் கடந்த 15 நாட்களாக சோழவந்தான் பேரூராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் நகருக்கு வெளியே சென்று சைக்கிள், ஆட்டோ மற்றும் தள்ளுவண்டி போன்றவற்றின் மூலம் தங்களுக்கு தேவையான குடிநீரை எடுத்து வருகின்றனர்.

சாலை மறியல்

சேதமடைந்த குழாய்களை சரிசெய்து சீராக குடிநீர் கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று 50–க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரூராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் விரைவில் குடிநீர் வினியோகம் சீராகும் என்று உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சோழவந்தானில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்