தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி மூங்கில்துறைப்பட்டில் பரபரப்பு

தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் மூங்கில்துறைப்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-02-13 22:15 GMT
குடிநீர் கிணறு வறண்டது

மூங்கில்துறைப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பழையூர், அண்ணாநகர், காட்டுக்கொட்டாய் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தென்பெண்ணை ஆற்றில் கிணறு அமைத்து, அங்கிருந்து குழாய் மூலம் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக தென்பெண்ணை ஆற்றில் இருந்த குடிநீர் கிணற்றின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வறண்டு போனது.

வினியோகம் செய்வதில் சிக்கல்

இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 10 நாட்களாக பழையூர் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் வினியோகம் செய்ய மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை குடிநீர் வினியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல் செய்ய முயற்சி

இதனால் ஆத்திரமடைந்த பழையூர், அண்ணாநகர், காட்டுக்கொட்டாய் பகுதிகளை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று அதிகாலை காலி குடங்களுடன் மறியல் செய்வதற்காக அங்குள்ள கள்ளக்குறிச்சி–திருவண்ணாமலை சாலைக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் சிவா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட முயன்ற மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது அவர், இன்னும் ஓரிரு நாட்களில் மாற்று ஏற்பாடு செய்து, தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்