புளியரையில் சிறுத்தைப்புலி மீண்டும் அட்டகாசம்

செங்கோட்டை அருகே புளியரையில் சிறுத்தைப்புலி மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

Update: 2017-02-12 23:57 GMT

செங்கோட்டை,

செங்கோட்டை அருகே புளியரையில் சிறுத்தைப்புலி மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. ஆட்டு தொழுவத்தில் புகுந்து 2 ஆடுகளை அடித்துக் கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சிறுத்தைப்புலி அட்டகாசம்

தமிழக–கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான செங்கோட்டை அருகில் உள்ள புளியரை, பண்பொழி, குற்றாலம், கண்ணுப்புலிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனவிலங்குகள் உணவுக்காக மலையடிவார குடியிருப்புகளில் புகுந்தன. அவ்வாறு வரும் வன விலங்குகள், விவசாய பயிர்களையும், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளையும், தோட்டங்களில் காவலுக்கு இருக்கும் நாய்களையும் இரையாக்கின. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புளியரையில் செந்தூர் பாண்டியன் என்பவருடைய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது. பின்னர் கேரள மாநிலம் ஆரியங்காவில் கடவன்பாறை எனும் இடத்தில் தொழுவத்தில் கட்டியிருந்த 4 ஆடுகளை கடித்துக் கொன்றது. ஆகஸ்ட் மாதத்தில் அச்சன்கோவில் பகுதியில் ஆண் யானையையும், அங்குள்ள தொழுவத்தில் கட்டியிருந்த ஆட்டையும் கடித்துக் கொன்றது.

மேலும் புளியரை மடத்தரை பாறை பகுதியில் வெள்ளைத்தாய் என்பவரையும், கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்பவரையும் சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது.

2 ஆடுகளை கடித்துக் கொன்றது

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் 3 மணி அளவில் புளியரை தட்சிணாமூர்த்தி நகர் பகுதி குடியிருப்பில் சிறுத்தைப்புலி புகுந்தது. அங்கு அழகம்மாள் என்பவருடைய வீட்டு தொழுவத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை கடித்துக் கொன்றது. ஒரு ஆட்டை தின்றுவிட்டு, மற்றொரு ஆட்டை பாதி கடித்து தின்ற நிலையில் போட்டுவிட்டு ஓடிவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் சிறுத்தைப்புலியின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கிராமங்களை விட்டு வெளியே செல்ல முடியாமல் பீதியில் உறைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்