வீடுகள் கட்டி கொடுக்கக் கோரி ஆதிவாசி மக்கள் போராட்ட அறிவிப்பு

திட்டள்ளி பகுதியிலேயே அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கக் கோரி ஆதிவாசி மக்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.

Update: 2017-02-12 22:54 GMT

குடகு,

திட்டள்ளி பகுதியிலேயே அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கக் கோரி ஆதிவாசி மக்கள் போராட்டம் அறிவித்துள்ளதால் திட்டள்ளி கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

575 வீடுகள் அகற்றம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா திட்டள்ளி கிராமத்தில் வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக வீடுகள் கட்டி இருப்பதாக கூறி ஆதிவாசி மக்களுக்கு சொந்தமான 575 குடிசைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினர் போலீசாரின் உதவியுடன் அகற்றினர். இந்த சம்பவம் குடகு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடுகளை இழந்த ஆதிவாசி மக்கள் தங்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

இதையடுத்து கர்நாடக மாநில சமூக நலத்துறை மந்திரி ஆஞ்சனேயா தலைமையிலான குழுவினர் திட்டள்ளி கிராமத்திற்கு சென்று போராட்டம் நடத்திய ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விரைவில் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகள் கட்டி தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மந்திரி ஆஞ்சனேயா கூறினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஆதிவாசி மக்கள் கலைந்தனர். மேலும் குடிசைகளை இழந்தவர்களுக்கு அரசின் சார்பில் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.

போராட்ட அறிவிப்பு

இந்த நிலையில் வீடுகளை இழந்த 575 குடும்பத்தினரில் 522 குடும்பத்தினருக்கு குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் உள்ள பசவனஹள்ளி, ராமபுரா, விராஜ்பேட்டை தாலுகாவில் உள்ள பாலலே பகுதிகளில் அரசு நிலம் ஒதுக்கி வீடுகள் கட்டி தர முடிவு செய்து உள்ளது. ஆனால் ஆதிவாசி மக்கள் எங்களுக்கு திட்டள்ளி பகுதியிலே அனைவருக்கும் வீடுகளை கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த இடத்தில் வீடுகள் கட்டி தர அரசு மறுத்து வருகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிவாசி மக்கள் திட்டள்ளி பகுதியிலேயே எங்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும், மாற்று இடத்தில் கட்டி தந்தால் அங்கு போகமாட்டோம், எங்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் கட்டி கொடுத்தால் போராட்டம் நடத்துவோம் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஆதிவாசி மக்களுக்கான போராட்ட அமைப்பின் தலைவர் துரைசாமி என்பவர், திட்டள்ளி பகுதியில் அரசு வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (13–ந் தேதி) திட்டள்ளியில், ஆதிவாசி மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

144 தடை உத்தரவு

இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காத வண்ணம் தடுக்க திட்டள்ளி கிராமத்தை சுற்றிலும் 12–ந் தேதி (நேற்று) காலை 6 மணி முதல் 15–ந் தேதி(புதன்கிழமை) மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ரிச்சர்டு வின்சென்ட் டிசோசா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

திட்டள்ளி கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி அந்தப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்