‘மாவட்ட செயலாளர் எடுக்கும் முடிவே எங்கள் முடிவு’ கூவத்தூரிலிருந்து ஆம்பூர் வந்த பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி

‘ஆட்சி அமைக்க யாருக்கு ஆதரவு என்பதில் மாவட்ட செயலாளர் எடுக்கும் முடிவே எங்கள் முடிவு’ என கூவத்தூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த ஆம்பூர் எம்.எல்.ஏ.பாலசுப்பிரமணி பரபரப்பு பேட்டி அளித்தார்.

Update: 2017-02-12 23:00 GMT
ஆம்பூர்,

ஆதரவு திரட்டும் முயற்சி

தமிழகத்தில் புதிய அரசை அமைப்பதில் காபந்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் தங்கள் தரப்புக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சசிகலாவுக்கு ஆதரவு தரும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் பரவியதை தொடர்ந்து சசிகலாவும் அந்த சொகுசு பங்களாவுக்கு சென்று ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் தனித்தனியாக அழைத்து கருத்துகளை கேட்டறிந்தார்.

சொந்த ஊர் வந்த எம்.எல்.ஏ.

இந்த நிலையில் கூவத்தூர் சொகுசு பங்களாவில் இருந்த வேலூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணி நேற்று தனது சொந்த ஊரான ஆம்பூருக்கு வந்து இருந்தார். இதனால் அவர் வேறு ஏதும் முடிவு எடுத்துள்ளாரோ என பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அ.தி.மு.க. தொண்டர்களும், பத்திரிகையாளர்களும் அங்கு சென்றனர். அப்போது அவர் தனது மகளின் காதணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூவத்தூர் விடுதியில் யாரையும் அடைத்து வைக்கவில்லை. அனைவரும் அங்கு சுதந்திரமாக உள்ளோம். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா சனிக்கிழமையன்று தனித்தனியாக எங்களை சந்தித்து பேசினார். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கே.சி.வீரமணி என்ன முடிவு எடுக்கிறாரோ அதன்படிதான் நாங்கள் செயல்படுவோம். ஏனெனில் இதுவரை அவர் சொல்வதைதான் செயல்படுத்தி வந்தோம். அதனால் அவர் முடிவுதான் எங்கள் முடிவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஒரு மோட்டார்சைக்கிளில் சென்று தனது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

போலீஸ் பாதுகாப்புடன்.....

அவர் தனது வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தலைமையிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, சென்னையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆம்பூர் வந்திருந்ததும் தெரியவந்தது.

ஆம்பூர் வந்த ஆர்.பாலசுப்பிரமணி எம்.எல்.ஏவிடம், ஆம்பூர் நகர செயலாளர் எம்.மதியழகன், மாதனூர் ஒன்றிய செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, முன்னாள் தொகுதி செயலாளர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் என்ன முடிவு எடுப்பது என கேட்டபோது அனைவரையும் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்