தமிழகத்தில் கவர்னர் ஆட்சி தேவை இல்லை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேட்டி

தமிழகத்தில் கவர்னர் ஆட்சி தேவை இல்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.

Update: 2017-02-12 22:45 GMT
தஞ்சாவூர்,

“உங்களுடன் நான்”

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து “உங்களுடன்நான்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி திருச்சியில் நேற்று முன்தினம் விஜயகாந்த் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் தஞ்சை புறவழிச்சாலை விளார் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு வந்து தங்கினார்.

இந்த நிலையில் தே.மு.தி.க.வின் 17-ம் ஆண்டு கொடி அறிமுக நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே தே.மு.தி.க. கொடியேற்று விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் முகமதுஅலி தலைமை தாங்கினார். துணை செயலாளர் கணேஷ்காந்த் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் சிவனேசன், தெற்கு மாவட்ட செயலாளர் பழனிவேல், வடக்கு மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தே.மு.தி.க. கொடியேற்றினார்

கொடியேற்று விழாவில் பங்கேற்பதற்காக தஞ்சையில் தங்கி இருந்த விஜயகாந்த் காலை 10.30 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்பட்டு கீழவாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு வந்தார். அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பின்னர் தே.மு.தி.க. கொடி அறிமுக நாளையொட்டி சிலை அருகே தே.மு.தி.க. கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. அமைப்பு செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ராமநாதன், மாவட்ட நிர்வாகிகள் புஷ்பராஜ், இளங்கோவன், முன்னாள் நகர செயலாளர் அடைக்கலம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விஜயகாந்த் பேட்டி

பின்னர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

தே.மு.தி.க. கொடிநாளையொட்டி தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் டெல்டா மாவட்டத்திற்கு வந்துள்ளேன். தினமும் ஏராளமான விவசாயிகள் இறக்கிறார்கள். ஆனால் நீங்கள் அதைப்பற்றி கேட்காமல், அரசியல் பற்றி கேட்கிறீர்கள்.

அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை. தமிழகத்தில் நிலையான கவர்னர் இல்லை. நிலையான அரசு இல்லை. தமிழகத்தில் கவர்னர் ஆட்சி தேவை இல்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை போல் உள்ளது. தமிழகத்தில் எத்தனை விவசாயிகள் இறந்துள்ளனர் என இந்த அரசு அறிக்கை வெளியிட வில்லை. விவசாயிகளை பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் மக்கள் பிரச்சினை பற்றி தான் பேசுவேன். தே.மு.தி.க.வின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புகைப்படம்

பின்னர் விஜயகாந்த் தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்பினார். அங்கு “உங்களுடன் நான்” நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தஞ்சை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வந்திருந்தனர்.

அவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக தனியாக ஒரு அரங்கம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த அரங்கத்தில் விஜயகாந்த், தொண்டர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொண்டர்கள் வரிசையாக சென்று புகைப்படம் எடுக்க டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் அடிப்படையில் தொண்டர்களை பாதுகாவலர்கள் உள்ளே அனுமதித்தனர். 

மேலும் செய்திகள்