திருச்சி முதலியார் சத்திரத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் திட்டம் என்ன ஆனது? பொதுமக்கள் கேள்வி

திருச்சி முதலியார் சத்திரத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் திட்டம் என்ன ஆனது? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Update: 2017-02-12 22:45 GMT
குட்ஷெட் யார்டு

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் ரெயில்வேயின் ‘குட்ஷெட் யார்டு’ உள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் சரக்கு ரெயில்களில் கொண்டு வரப்படும் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள், யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உர மூட்டைகள் இங்கு தான் இறக்கப்படும். பின்னர் அவை இங்கிருந்து லாரிகள் மூலம் கே.கே.நகரில் உள்ள மத்திய தானிய கிடங்கிற்கு எடுத்து செல்லப்படும். உர மூட்டைகள் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள உர குடோன்களுக்கு எடுத்து செல்லப்படும். மேலும் திருச்சி பகுதியில் இருந்து வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நெல், சிமெண்ட் மூட்டைகள் உள்ளிட்ட பொருட்களும் இங்கிருந்து தான் ரெயில்களில் ஏற்றப்படுகின்றன. திருச்சி கோட்டம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே இந்த யார்டு இங்கு செயல்பட்டு வருகிறது.

ரெயில்வே கேட்

இந்த யார்டுக்கான தண்டவாளத்தில் ரெயில்வே பணியாளர்களால் இயக்கப் படும் ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சென்னை பைபாஸ் சாலையில் இருந்து திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் வழியாக குட்ஷெட் மேம்பாலம் வரும் வாகனங்கள் பாலக்கரை, எடத்தெரு, வரகனேரி, காந்தி மார்க்கெட்டிற்கு செல்லும் வாகனங்கள் இந்த ரெயில்வே கேட் வழியாக தான் முதலியார் சத்திரம் ஊருக்குள் சென்று பின்னர் அங்கிருந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியும். முதலியார் சத்திரம் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவது இல்லை என்றாலும் சரக்கு ரெயில்கள் பொருட்களை இறக்க வரும் நேரத்தில் 30 நிமிட நேரத்திற்கும் மேலாக கேட் மூடப்படுவது வழக்கம். இதன் காரணமாக வாகனங்கள் கேட்டின் இருபுறமும் நிறுத்தப்பட்டு விடுகின்றன.

மாற்றுப்பாதை

மேலும் இந்த பாதை பாலக்கரை மெயின்ரோட்டில் மேலப்புதூர் பகுதியில் ஏதாவது போக்குவரத்து நெருக்கடி என்றாலும், மழைக்காலங்களில் மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நின்றாலும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த மாற்றுப்பாதை வழியாக தான் திருப்பி விடப்படுகின்றன. இந்த சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாற்றுப்பாதையாக இருப்பதால் முதலியார் சத்திரம் ரெயில்வே கேட்டை அகற்றி விட்டு அந்த இடத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு மாநில அரசின் நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு இருந்தது. இதற் கான அனுமதி கேட்டு ரெயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

திட்டம் என்ன ஆனது?

ரெயில்வே துறை ஒப்புதலுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இதற்காக ரூ.27 கோடியில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டம் என்ன ஆனது? செயல்பாட்டுக்கு வருமா? என இன்று வரை தெரியவில்லை. கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தை தூசு தட்டி எடுத்து, முதலியார் சத்திரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்