தஞ்சை அருகே மாட்டுவண்டி பந்தயம் 2-வது நாளாக சேவல் சண்டையும் நடந்தது

தஞ்சை அருகே மாட்டுவண்டி பந்தயம் நேற்று நடந்தது. இதே போல 2-வது நாளாக சேவல் சண்டையும் நடந்தது.

Update: 2017-02-12 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழக அரசு சட்டம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம், சேவல்சண்டை போன்றவை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கப்பட்டதையடுத்து ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம், சேவல் சண்டை போன்றவை நடைபெறவில்லை. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி மாணவர்கள் நடத்திய போராட்டத்தையடுத்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, மாட்டுவண்டி பந்தயம் போன்றவை நடைபெற்று வருகிறது.

மாட்டுவண்டி பந்தயம்

அதன்படி தஞ்சையை அடுத்த அம்மன்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் இரட்டை மாடு பூட்டிய வண்டி, இரட்டை மாடு டயர் வண்டி, ஒத்தை மாடு, கைபுறா (மாடுகளை கையில் பிடித்துக்கொண்டு ஓடுதல்) என போட்டிகள் நடைபெற்றன. இதில் இரட்டை மாடு பூட்டி வண்டிக்கு 6 கிலோ மீட்டர் தூரமும், இரட்டை மாடு டயர் வண்டிக்கு 4 கிலோ மீட்டர் தூரமும், ஒத்தை மாடு வண்டிக்கு 4 கிலோ மீட்டர் தூரமும், கைபுறா போட்டிக்கு 2 கிலோ மீட்டர் தூரமும் போட்டிகள் நடந்தன.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. கைபுறா போட்டியில் பங்கேற்ற போது 3 பேர் கீழே விழுந்ததில் காயம் அடைந்தனர். மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றதையொட்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்டுகளித்தனர். மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

2-வது நாளாக சேவல் சண்டை

தமிழர் பொங்கல் வீர விளையாட்டு விழாவையொட்டி தென்மண்டல வீர விளையாட்டு கலை சங்கம் சார்பில் 9-ம் ஆண்டு வெற்றுக்கால்சேவல் சண்டை போட்டி தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகே உள்ள அய்யனார்கோவில் அருகில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாகவும் சேவல் சண்டை நடந்தது.

இந்த போட்டியில் ககர், யாக்கூப், தும்மர், ஜாவா, சீத்தா, பொட்டைமாரி என 15 வகையான சேவல்கள் கலந்து கொண்டன. 15 நிமிடம் போட்டி, 15 நிமிடம் இடைவெளி என ஒவ்வொரு சேவல்களுக்கும் 1 மணி நேரம் போட்டிகள் நடைபெற்றன. போட்டிக்காக 30 களங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று 2-வது நாள் போட்டியிலும் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, மராட்டியம், ஆந்திரா ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் கலந்து கொண்டன. 

மேலும் செய்திகள்