பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை: வாலிபர் கைது

கீழ்கட்டளையில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வாலிபர் கைது

Update: 2017-02-12 21:15 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கீழ்கட்டளை கணபதி அவென்யூவைச் சேர்ந்தவர் தங்கசுரேஷ். தண்ணீர் கேன் வினியோகம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவரதி(வயது 22). கடந்த மாதம் சிவரதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த 2 வாலிபர்கள், திடீரென சிவரதியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கைகளை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார், பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் கல்யாண் உத்தரவின் பேரில் மடிப்பாக்கம் உதவி கமி‌ஷனர் கோவிந்தராஜன் மேற்பார்வையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, குருபாதம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

அதில் திருச்செந்தூரைச் சேர்ந்த முருகன்(30) என்பவர் தங்கசுரேஷிடம் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வந்ததும், தற்போது அவர் வேலையை விட்டு நின்று விட்டதும் தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் தனது நண்பர் வினோத் என்பவருடன் சேர்ந்து சிவரதியை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

முருகனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 12 பவுன் தங்க நகைகள், ஒரு மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத்தை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்