தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இல்லை டாக்டர் ராமதாஸ் பேட்டி
தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இல்லை என்று டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் காஞ்சீபுரம் மேற்கு, தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம், காஞ்சீபுரம் அண்ணா அரங்கத்தில் நடந்தது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொன்கங்காதரன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்தி பெ.கமலம்மாள், திருக்கச்சூர் ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்குமார், உமாபதி, செல்வராஜ், ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
உச்சக்கட்ட சண்டைபின்னர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினர் இருவருமே வாக்காளர்களுக்கு ரூ.200, ரூ.300 கொடுத்து நாட்டை சுரண்டி கொண்டிருக்கிறார்கள். தற்போது கோர்ட்டில் இருக்கும் வழக்கு தீர்ப்புக்காக தமிழக கவர்னர் காத்து இருக்கலாம். அதிகார போட்டிக்காக அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இவர்களுக்கிடையே உச்சக்கட்ட சண்டை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் உடனடியாக தேர்தல் வர வாய்ப்பு இல்லை. மத்திய அரசின் தலையீடு தமிழ்நாட்டில் இருப்பதாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.