கிணற்றில் கிடந்த அபூர்வ நட்சத்திர ஆமையை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர்
ராமேசுவரத்தில் கிணற்றில் கிடந்த அபூர்வ நட்சத்திர ஆமையை பள்ளி மாணவர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
ராமேசுவரம் ஆத்திக்காடு பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் என்பவருடைய மகன் முனிசுந்தர். இவர் வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலை பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆத்திக்காடு பகுதியில் தண்ணீர் இல்லாத ஒரு கிணற்ற அருகே நேற்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த கிணற்றில் அபூர்வ நட்சத்திர ஆமை ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார்.
உடனே அந்த ஆமையை மீட்டு நகர் போலீஸ் நிலையம் கொண்டு சென்றார். அங்கு சப்–இன்ஸ்பெக்டர் சிவசாமி, தனிப்பிரிவு காவலர் மாணிக்கம் ஆகியோர் மண்டபம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அங்க வந்த வனத்துறை வேட்டைதடுப்பு காவலர்களிடம் போலீசார் முன்னிலையில் பள்ளி மாணவர் முனிசுந்தர் நட்சத்திர ஆமையை வனத்துறையிடம் ஒப்படைத்தார். பின்னர் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர் நட்சத்திர ஆமையை காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.
ஆமையின் சிறப்புஇது பள்ளி மாணவர் முனிசுந்தர் கூறியதாவது:–
ராமேசுவரம் கெந்தமாதன பர்வதம் அருகே உள்ள நகுல தீர்த்த குளத்தில் உயிருடன் நீந்தி கொண்டிருந்த அபூர்வ நட்சத்திர ஆமையை வனத்துறையினர் மீட்டுஅடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர். இந்த செய்தி ‘தினத்தந்தி’யில் படத்துடன் பிரசுரிக்கப்பட்டது. இதை பார்த்து நட்சத்திர ஆமையின் சிறப்பு பற்றி படித்து தெரிந்து கொண்டேன். இதையடுத்து விளையாடிக்கொண்டு இருந்தபோது கிணற்றில் கிடந்த நட்சத்திர ஆமையை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். பள்ளி மாணவர் கொண்டு வந்த அபூர்வ நட்சத்திர ஆமையை கண்ட போலீசார், ஆர்வமாகசெல்போன்களிலும் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.