கோபி அருகே சாலை மறியல் செய்ய பொதுமக்கள் முயற்சி

கோபி அருகே பாரியூர் வெள்ளாளபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி எஸ்.பி.நகர். இந்த பகுதியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

Update: 2017-02-12 21:30 GMT

கடத்தூர்

கோபி அருகே பாரியூர் வெள்ளாளபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி எஸ்.பி.நகர். இந்த பகுதியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு அந்த பகுதியில் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எஸ்.பி.நகருக்கு அருகில் உள்ள பகுதி நஞ்சப்பா நகர்.

 இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் நஞ்சப்பா நகர் பகுதியில் உள்ளவர்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதன்காரணமாக எஸ்.பி.நகரில் உள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து நஞ்சப்பா நகருக்கு குழாய் பதித்து குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எஸ்.பி.நகரை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அங்குள்ள ஈரோடு–சத்தியமங்கலம் ரோட்டில் சாலை மறியல் செய்வதற்காக நேற்று பகல் 11 மணி அளவில் சென்றனர். இதுபற்றி அறிந்ததும் கோபி வட்டார வளர்ச்சி அதிகாரி அக்தர் பேகம், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘ஏற்கனவே எஸ்.பி.நகரில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இந்த நிலையில் நஞ்சப்பா நகர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்தால் எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு மேலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்,’ என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில், ‘இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் முயற்சியை கைவிட்டு 11.20 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்