கடமலை–மயிலை ஒன்றியத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் தென்னை மரங்கள் விவசாயிகள் கவலை
கடமலை–மயிலை ஒன்றியத்தில் தண்ணீர் இல்லாமல் தென்னை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கடமலை–மயிலை ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு கடமலைக்குண்டு பகுதியில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. மேலும் வைகை ஆறும் கடந்த சில மாதங்களாக வறண்டு காணப்படுகிறது.
இதன் காரணமாக கிராம பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. எனவே தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தென்னை மரங்கள் கருக தொடங்கியது. மரங்களை காப்பாற்ற சொட்டுநீர் பாசனம், புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
உற்பத்தி பாதிப்புஆனால் போதிய மழை இல்லாததால் எந்த பணிகளும் விவசாயிகளுக்கு கைகொடுக்கவில்லை. எனவே கடந்த மாதம் மயிலாடும்பாறை பகுதியில் உள்ள கருப்பையாபுரம், மயிலாடும்பாறை, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் கடுமையாக பாதிப்படைந்தது. மேலும் தொடர்ந்து மழை இல்லாததால் தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தியும் கடுமையாக பாதிப்படைந்தது.
அதேநேரம் சந்தைகளில் தேங்காய் விலையும் தொடர்ந்து சரிந்து கொண்டே வந்ததால் தென்னை விவசாயிகள் கடுமையான நஷ்டம் அடைந்தனர். விவசாயிகள் அனைவரும் மழையை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் கடந்த மாதம் வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்து மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை இல்லாததால் வருசநாடு கிராமம் வரை மட்டுமே மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது.
வெட்டி அழிப்புஎனவே மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது வெயில் அதிகமாக உள்ளதாலும், மழைக்காலம் தொடங்க 5 மாதங்களுக்கு மேல் உள்ளதாலும் விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டி அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
துரைச்சாமிபுரம், மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதியில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து மழை இல்லாமல் காணப்பட்டால் அடுத்த சில மாதங்களில் கடமலை–மயிலை ஒன்றியத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் வெட்டி அழிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.