அரசு அனுமதியின்றி 18 வயதுக்கு உட்பட்டவர்களை தத்து கொடுத்தால் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
குழந்தைகளை தத்து எடுத்து கொள்ள விரும்புபவர்கள் அரசின் அனுமதி பெற்ற சிறப்பு தத்து மையங்கள் மூலமாகவே தத்து எடுக்க வேண்டும். ஆதரவற்று தனித்து விடப்பட்ட குழந்தைகள், பெற்றோரால் ஒப்படைக்கப்படுகின்ற குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்படும் மற்றும் புறக்கணிக்கப்படும் குழந்தைகள் குறித்த தகவல்கள் தெரிய வரும் நிலையில் அவர்கள் குறித்த தகவல்களை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்துக்கும், திருவண்ணாமலை கிரிவலப்பாதை இடுக்கு பிள்ளையார் கோவில் அருகேயுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் திருவண்ணாமலை–பெரும்பாக்கம் சாலையில் உள்ள குழந்தைகள் நலக்குழுவிடமும் தெரிவிக்கலாம்.
மேலும் இயக்குனர், சொசைட்டி பார் ரூரல் டெவலப்மெண்ட், பசுமை நகர், பாச்சல் அஞ்சல், திருப்பத்தூர் தாலுகா, வேலூர் மாவட்டம், இயக்குனர், லைப்லைன் டிரஸ்ட், 3–வது கிராஸ் சந்திரன் கார்டன், சின்னதிருப்பதி, சேலம் என்ற முகவரிக்கும் தெரிவிக்க வேண்டும்.
அரசின் அனுமதி இல்லாமல் 18 வயதுக்கு உட்பட்டவர்களை தத்து கொடுப்பதோ, தத்து எடுத்து கொள்வதோ சட்டப்படி குற்றமாகும். மேற்படி நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.