மதுரவாயலில் மேம்பால தூணில் மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் பலி நண்பர் படுகாயம்

மதுரவாயலில், பறக்கும் சாலை திட்டத்துக்காக அமைக்கப்பட்டு உள்ள மேம்பால தூணில் மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2017-02-11 22:49 GMT

பூந்தமல்லி,

என்ஜினீயரிங் மாணவர்கள்

சென்னை மேற்கு முகப்பேரைச் சேர்ந்தவர் தமிழரசன். இவருடைய மகன் செல்வபாரதி(வயது 18). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவருடைய நண்பரான மதுரவாயலை சேர்ந்த பழனிச்சாமி(18) என்பவர் சோமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

பழனிச்சாமி படிக்கும் கல்லூரியில் நேற்று விழா நடைபெற்றதால் அதில் கலந்து கொள்ள நண்பர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சோமங்கலம் சென்றனர். மோட்டார் சைக்கிளை செல்வபாரதி ஓட்டினார். அவருக்கு பின்னால் பழனிச்சாமி அமர்ந்து இருந்தார்.

தூணில் மோதி பலி

மதுரவாயலில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது செல்வபாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், அங்கு மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை கனரக வாகனங்கள் செல்ல பறக்கும் சாலை திட்டத்துக்காக அமைக்கப்பட்டு இருந்த மேம்பால தூணில் பயங்கரமாக மோதியது.

இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த செல்வபாரதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பழனிச்சாமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான செல்வபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்