குடகு மாவட்டத்தில் வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க நிரந்தர நடவடிக்கை

குடகு மாவட்டத்தில் வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-02-11 22:39 GMT

குடகு,

குடகு மாவட்டத்தில் வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

குருநந்தா பூஜை

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா கோட்டூர் பகுதியில் உள்ள ஆதிசுஞ்சன கிரி மடத்தில் நேற்று குருநந்தா பூஜை நடைபெற்றது. இதில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமராசாமி கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடகத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தலமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறதா? என மக்கள் சந்தேகப்படுகின்றனர். ஏனெனில் மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் பல தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக மாநில அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக குடகு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மக்களுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் குடகு மாவட்டத்தில் எந்தவிதமான வளர்ச்சி பணிகளையும் இந்த அரசு செய்யவில்லை.

நிரந்தர நடவடிக்கை

மலைநாடு என அழைக்கப்படும் குடகு மாவட்டத்தில் வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக காட்டு யானைகள் இங்குள்ள காபி மற்றும் வாழை தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், பல விவசாயிகள் உயிர் இழந்து உள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் இதுகுறித்து வனத்துறை மந்திரியோ அல்லது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களோ விவசாயிகளை சந்தித்து பேசவில்லை.

உடனே குடகு மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். குடகு மாவட்டத்தில் வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க மாநில அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மாநில அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்