திம்பம் மலைப்பாதையில் டேங்கர் லாரி கவிழ்ந்தது; டிரைவர் உடல் நசுங்கி சாவு

திம்பம் மலைப்பாதையில் டேங்கர் லாரி தலைகுப்புற கவிழ்ந்ததில் உடல் நசுங்கி டிரைவர் இறந்தார். டேங்கர் உடைந்து ‘ஆசிட்’ சிதறியதால் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேரின் உடல் வெந்தது.

Update: 2017-02-11 22:45 GMT
‘ஆசிட்’ ஏற்றிய டேங்கர் லாரி

தூத்துக்குடியில் இருந்து ‘ஆசிட்’ ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று கர்நாடக மாநிலம் மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை நெல்லையை சேர்ந்த கந்தசாமி (வயது 47) என்பவர் ஓட்டினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று மாலை 4 மணி அளவில் சென்றபோது டேங்கர் லாரியை டிரைவரால் திருப்ப முடியவில்லை.

உடல் நசுங்கி சாவு

இதனால் லாரியை பின்னோக்கி டிரைவர் கந்தசாமி இயக்கினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி 9-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து கிடுகிடுவென 70 அடி பள்ளத்தில் உருண்டு 7-வது கொண்டை ஊசி வளைவுக்கு வந்து நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே டிரைவர் கந்தசாமி பரிதாபமாக இறந்தார். மேலும் உயரத்தில் இருந்து உருண்டு விழுந்ததால் லாரியின் டேங்கர் உடைந்து அதில் இருந்த ’ஆசிட்’ சிதறியது.

உடல் வெந்தது

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த நம்பியூரை சேர்ந்த சதீஸ்குமார் (27), அவருடைய நண்பர் வெங்கடாசலம் (34) ஆகியோர் மீது ‘ஆசிட்’ பட்டது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் முகம், கை, கால் மற்றும் உடலின் பல பகுதிகள் வெந்தன. இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறி துடித்தனர்.

இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனே அவர்கள் 2 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

புது மாப்பிள்ளை

இதில் சதீஸ்குமாருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. திருமணம் நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ளன. எனவே சதீஸ்குமாரும், அவருடைய நண்பர் வெங்கடாசலமும் திருமண பத்திரிகையை தாளவாடியில் உள்ள உறவினர்களுக்கு கொடுப்பதற்காக சென்றபோதுதான் துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிக்கிக்கொண்டனர்.

எரிச்சல்

இதற்கிடையே டேங்கர் லாரியில் இருந்த ஆசிட் ரோட்டில் வழிந்தோடியது. இதனால் அந்த பகுதியில் புகை மூட்டம் எழுந்ததுடன், ஒருவித நெடி வீச தொடங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களுக்கு கண், கை, கால்களில் எரிச்சல், சுவாசிப்பதில் கோளாறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து எந்தவித வாகனங்களும் முன்னேறி செல்ல முடியவில்லை. மேலும் ‘ஆசிட்’ ரோட்டில் வழிந்தோடியபடி இருந்ததால் வாகனங்கள் அனைத்தும் பின்னோக்கி நகர்ந்தன. 7-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 4-வது கொண்டை ஊசி வரை ‘ஆசிட்’ வழிந்தோடியது. இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திக்கு சென்று ‘ஆசிட்’ வழிந்தோடிய ரோட்டில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அதன் வீரியத்தை செயல் இழக்க செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

உடல் மீட்பு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த கந்தசாமியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக பண்ணாரியில் இருந்து ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டது. 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கந்தசாமியின் உடலை இரவு 8 மணி அளவில் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து டேங்கர் லாரியை ரோட்டில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து ஏற்பட்டதும் பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் போலீசாரும், ஆசனூர் சோதனை சாவடியில் தாளவாடி போலீசாரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக 2 சோதனை சாவடிகளிலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த சம்பவத்தால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு 11 மணிவரை மீட்பு பணிகள் நடைபெற்றன. இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்