அதிக விபத்துகள் ஏற்படும் சாலையில் மஞ்சள் நிற குறியீடு

கோவையில் அதிக விபத்துகள் ஏற்படும் சாலையில் மஞ்சள்நிற குறியீடு வரையப்பட்டு தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-02-11 22:30 GMT
கோவை

கோவையில் அதிக விபத்துகள் ஏற்படும் சாலையில் மஞ்சள்நிற குறியீடு வரையப்பட்டு தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் எஸ்.சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

40 நாளில் 28 பேர் சாவு

கோவை நகரில் கடந்த ஆண்டு 285 விபத்துகளில் 300 பேர் இறந்தனர். இந்த ஆண்டு கடந்த 40 நாட்களில் நடந்த விபத்துகளில் 28 பேர் இறந்துள்ளனர். இருசக்கர வாகனங்களில் சென்று விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோவை அவினாசி ரோட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற விபத்தில் 49 பேரும், திருச்சி சாலையில் 27 பேரும் இறந்துள்ளனர். பொள்ளாச்சி சாலையில் 26 பேரும், மேட்டுப்பாளையம் சாலையில் 5 பேரும் இறந்துள்ளனர்.இரவு 7 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை நடைபெற்ற விபத்துகளில் கடந்த ஆண்டு 100 பேர் இறந்துள்ளனர். இரவில் நடைபெறும் விபத்துகளில் 21 வயது முதல் 25 வயது மதிக்கத்தக்கவர்கள் 40 பேர் இறந்துள்ளனர். பாதசாரிகளில் 61 முதல் 70 வயது மதிக்கத்தக்கவர்கள் 44 பேர் இறந்தனர்.

மஞ்சள்நிற குறியீடு

இந்த ஆண்டு நடைபெற்ற விபத்துகளில் 28 பேர் இறந்த சாலைப்பகுதிகளில் மஞ்சள் குறியீடு போடப்பட்டு ‘304-ஏ’ விபத்தால் உயிரிழப்பு ஏற்படும் பகுதி என்று எழுதப்படும். இதன் மூலம் பொதுமக்கள் உஷார்படுத்தப்படுவதுடன், பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்த இந்த நடைமுறை கையாளப்படுகிறது.இந்த பகுதிகள் தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கப்படும்.

கோவை காந்திபுரம் பகுதியில் டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டு விபத்து சாவு, காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை விவரங்களை தினந்தோறும் பொதுமக்கள் அறியும் வகையில் தெரியப்படுத்த நட வடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு துணை கமிஷனர் சரவணன் கூறினார். 

மேலும் செய்திகள்