நிலுவையில் இருந்த 832 வழக்குகளுக்கு சமரச தீர்வு; ரூ.13 கோடியே 33 லட்சம் பைசல் மக்கள் நீதிமன்றம் நடவடிக்கை

சேலம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 832 வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் சமரச தீர்வு காணப்பட்டு ரூ.13 கோடியே 33 லட்சம் பைசல் செய்யப்பட்டது.

Update: 2017-02-11 23:00 GMT

சேலம்,

தேசிய மக்கள் நீதிமன்றம்

இந்தியா முழுவதும் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் கோர்ட்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் மாவட்டங்களில் உள்ள கோர்ட்டுகளில் மாதந்தோறும் ஒருநாள் மக்கள் நீதிமன்றம் மூலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரசம் செய்து தீர்வு காணப்பட்டு பணம் பைசல் செய்யப்பட்டு வருகிறது.

7,981 வழக்குகள் விசாரணை

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான மோகன்ராஜ் தலைமையில் சேலம் அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் மற்றும் சங்ககிரி ஆகிய கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் மூலம் 7,981 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதாவது மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நிலம் அபகரிப்பு, குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி, தொழிலாளர் நல வழக்கு, பாகப்பிரிவினை, வங்கி கடன் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டன.

சேலம் அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த சமரச தீர்வு மையத்தில் 7 அமர்வுகளாக வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மக்கள் நீதிமன்ற நிரந்தர நீதிபதி என்.குணவதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நீதிபதிகள் அல்லி, விஜயகுமாரி, பாலசுப்பிரமணியன், எழில், ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற நீதிபதி ராஜமாணிக்கம், உறுப்பினர்கள் மோகனமுரளி, காமாட்சி, பரசுராமன், ராணி மற்றும் வக்கீல்கள் அடங்கிய 7 அமர்வுகளாக விசாரணை நடத்தப்பட்டது. இதுபோல ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய கோர்ட்டுகளில் 15 அமர்வுகளாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ரூ.13 கோடியே 33 லட்சம் பைசல்

சேலம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் மற்றும் சங்ககிரி ஆகிய கோர்ட்டுகளில் நேற்று மட்டும் மொத்தம் 7,981 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதில் 832 வழக்குகளுக்கு மட்டும் உடனடியாக சமரச தீர்வு காணப்பட்டது. அதன்படி, இந்த வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்ட தொகை ரூ.13 கோடியே 33 லட்சத்து 66 ஆயிரத்து 212 ஆகும். அந்த தொகை உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பைசல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்