50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது திருமணம் நிச்சயமான ஜோடி உள்பட 3 பேர் படுகாயம்

ஏற்காடு மலைப்பாதையில் விபத்தில் சிக்கி 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. திருமணம் நிச்சயமான ஜோடி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-02-11 23:00 GMT

ஏற்காடு,

ஏற்காடு மலைப்பாதையில் விபத்தில் சிக்கி 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. திருமணம் நிச்சயமான ஜோடி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருமணம் நிச்சயம்

சேலம் சின்னத்திருப்பதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது48). இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் சொந்த ஊரான சேலத்திற்கு வந்திருந்தார். இவரது குடும்ப நண்பர் செல்வராஜ். இவரின் மகள் சவுமியா(23). சவுமியா சென்னை தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் விடுமுறையில் சேலம் வந்துள்ளார்.

இதற்கிடையே சின்னத்திருப்பதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிரி(27) என்பவருக்கும், சவுமியாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் சுற்றுலா தலமான ஏற்காட்டை சுற்றிப்பார்க்க செந்தில்குமார் மற்றும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட கிரி–சவுமியா ஆகிய 3 பேரும் காரில் ஏற்காடு சென்றனர்.

கார் கவிழ்ந்தது

இந்த நிலையில் நேற்று அதிகாலை காரில் ஏற்காட்டில் இருந்து சேலம் திரும்பினர். செந்தில்குமார் காரை ஓட்டி வந்தார். கார் 3–வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, பனிமூட்டமாக இருந்ததால் கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்து கொண்டு 50 அடி பள்ளத்தில் உருண்டது.

அப்போது காரில் இருந்த மூவரும் கூச்சலிட்டனர். பள்ளத்தில் உருண்ட காரில் மூவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயத்துடன் தவித்தனர். விபத்தில் சிக்கிய செந்தில்குமார், கிரி, சவுமியா ஆகியோரை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் மீட்டனர். இதில் சவுமியாவின் கால் முறிந்தது. மூவரும் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தினர்.


மேலும் செய்திகள்