திருநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் வேடிக்கை பார்த்த வாலிபர் பலி; 89 பேர் காயம்

இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி தள்ளியதில் வேடிக்கை பார்த்த வாலிபர் ஒருவர் இறந்தார். மேலும் 89 பேர் காயமடைந்தனர்.

Update: 2017-02-11 23:00 GMT
இலுப்பூர்,

ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா திருநல்லூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை திருவிழாவாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அவசர சட்டம் இயற்றப்பட்டதால் திருநல்லூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வாடிவாசலில் இருந்து இருபுறமும் பாதுகாப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை செய்து வந்தனர். நேற்று காலையில் 10 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்து காளைகளை துன்புறுத்தமாட்டோம் என்ற உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள் அனைவரும் அதனை திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

செல்போன் பரிசு

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 960 காளைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்திருந்தனர். இதைப்போல 514 மாடுபிடி வீரர்களும் பெயரை பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை காளைகளின் உரிமையாளர்கள் தங்களது காளைகளை லாரிகள், டிராக்டர், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் திருநல்லூருக்கு கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினார்கள். மாடுபிடி வீரர்களுக்கு செல்போன், குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்களும், ரொக்கப்பணமும் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு தொடங்கிய சிறிது நேரத்தில் வாடிவாசலை நோக்கி பார்வையாளர்கள் படையெடுத்து வந்தனர். இதனால் வாடிவாசல் வழியாக வந்த காளைகள் வெளியேற வழியில்லாமல் மீண்டும் வாடிவாசலை நோக்கி ஓடி வந்தன. இதனால் மாடுபிடி வீரர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் ஜல்லிக்கட்டு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

காளைகளின் உரிமையாளர்கள் ஏமாற்றம்

பின்னர் போலீசார் மற்றும் விழாக்கமிட்டியினர் பார்வையாளர்களை வாடிவாசல் பகுதியில் இருந்து அடித்து விரட்டினார்கள். இதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து வாடிவாசலில் இருந்து காளைகள் மீண்டும் அவிழ்த்து விடப்பட்டன. இந்நிலையில் மீண்டும் பார்வையாளர்கள் வாடிவாசலை நோக்கி படையெடுத்து வந்தனர். இதனால் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டு, பார்வையாளர்களை வெளியேற்றி விட்டு காளைகள் விடப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் வாடிவாசலை நோக்கி பார்வையாளர்கள் படையெடுத்து வந்தனர். அப்போது பார்வையாளர்கள் கூட்டத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதனால் பார்வையாளர்கள் மிரண்டு ஓடினார்கள். பார்வையாளர்களை கட்டுப்படுத்த முடியாததால் பதிவு செய்யப்பட்ட 960 காளைகள் கொண்டு வரப்பட்டும், சுமார் 345 காளைகளுக்கு மேல் அவிழ்த்து விடமுடியவில்லை. இதனால் காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு தங்களது காளைகளை கொண்டு வந்தும் அவிழ்த்து விட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பார்வையாளர்-மாடுபிடி வீரர்கள் காயம்

இதைப்போல பதிவு செய்த 514 மாடுபிடி வீரர்களில் சுமார் 308 மாடுபிடி வீரர்கள் மட்டுமே சுழற்சி முறையில் விழாக்கமிட்டியினர் அனுமதித்தனர். அதிக அளவில் காளைகளை அவிழ்த்து விட முடியாததால், குறைவான மாடுபிடி வீரர்களே அனுமதிக்கப்பட்டனர். பெரும் பாலான மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்காமல் வாடிவாசல் ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி தள்ளியதில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்தவர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் 90 பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை விழாக்கமிட்டியினர் உடனடியாக மீட்டு அங்கு இருந்த மருத்துவ குழுவினர் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வேடிக்கை பார்த்தவர் சாவு

இதில் சுமார் 20 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விராலிமலை அருகே உள்ள மாதுராப்பட்டியை சேர்ந்த சின்னையன் மகன் கார்த்திக் (வயது 22) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவர் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்தவர்.

ஜல்லிக்கட்டு போட்டியைக்காண புதுக்கோட்டை, இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், டிராக்டர்கள் போன்றவற்றில் வந்திருந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டன.

மேலும் தீயணைப்பு வாகனங்களும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஜல்லிக்கட்டு நடந்த இடத்தில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்படாததால் பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

மேலும் செய்திகள்