போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இளையான்குடி நகர் கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
இளையான்குடி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளையான்குடி,
போக்குவரத்து நெருக்கடி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாக இளையான்குடி உள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்டு சுமார் 50–க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இளையான்குடி அருகே மற்றொரு நகரான சாலைகிராமமும் உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள கிராமமக்கள் தங்களது தேவைக்கு இளையான்குடி வந்து செல்வது வழக்கம். இதனால் எப்போதுமே இளையான்குடி நகர் பரபரப்பாக காணப்படும். மேலும் இளையான்குடி சாலை போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. அதாவது, தமிழகத்தில் புனித தலமாக விளங்கும் ராமேசுவரத்திற்கு சாலை வழியாக செல்ல இளையான்குடி முக்கிய இடமாக உள்ளது. பரமக்குடியில் இருந்து திருச்சி செல்லும் சாலை, ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து சிவகங்கை செல்லும் சாலை ஆகியவை இளையான்குடி வழியாக செல்கிறது. இதனால் நகரில் எப்போது வாகனங்கள் வருவதும் போவதுமாக இருக்கும்.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாவே இளையான்குடி நகரில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப இளையான்குடியில் சாலைகள் விரிவுபடுத்தாத காரணத்தாலும், ஆக்கிரமிப்புகளாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு காரைக்குடி செல்லும் சாலை, பைபாஸ் சாலையாக நகரை சுற்றி அமைக்கப்பட்டது. ஆனால் பைபாஸ் சாலை சாதகமின்றி, பாதகமாகவே மக்களுக்கு மிஞ்சியது. அதாவது பரமக்குடியில் இருந்து வரும் பஸ்கள் இளையான்குடியில் உள்ள கீழாயூர் வந்து பைபாஸ் சாலை வழியாக சென்றுவிடும். இளையான்குடி நகருக்குள் பஸ்கள் வருவது கிடையாது. இதனால் இளையான்குடியை சேர்ந்த மக்கள் கீழாயூரில் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ. நடந்து வர வேண்டியுள்ளது. இதன்காரணமாக தற்போது மீண்டும் நகருக்குள் பஸ்கள் வர தொடங்கியுள்ளன.
கோரிக்கைசரக்கு வாகனங்கள், கனரக வாகனங்களும் பைபாஸ் சாலையில் தான் செல்ல வேண்டும். ஆனால் அந்த வாகனங்களும் நகருக்குள் வந்து செல்கின்றன. இதனால் இளையான்குடியில் முக்கிய சாலையாக உள்ள காமராஜர் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.