பட்டா மாறுதல் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பெண் கைது

பட்டா மாறுதல் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-01-19 22:15 GMT
ஊஞ்சலூர்,

லஞ்சம் கேட்டார்


திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நங்கவரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. அவருடைய மனைவி பத்மாவதி (வயது 47). பாலசுப்பிரமணி காவல்துறை பணியில் இருக்கும்போது இறந்துவிட்டார். இதனால் கருணை அடிப்படையில் பத்மாவதி ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகாவுக்கு உள்பட்ட அஞ்சூர் கிராம நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நல்லசெல்லிபாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பட்டா மாறுதல் சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவரிடம், பத்மாவதி பட்டா மாறுதல் சான்றிதழ் வழங்க ரூ.1,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

கிராம நிர்வாக அதிகாரி கைது


லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவக்குமார் இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் சிவக்குமார் நல்லசெல்லிபாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நேற்று மதியம் சென்று ரசாயனம் தடவிய பணத்தை கிராம நிர்வாக அதிகாரி பத்மாவதியிடம் கொடுத்தார். அந்த பணத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்மாவதியை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் சிவக்குமாருக்கு பட்டா மாறுதல் சான்றிதழ் வழங்க அவரிடம் லஞ்சம் கேட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் பத்மாவதியை கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்