தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கரூர் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தொலைபேசியில் பேசிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-01-19 00:29 GMT
கரூர்,

வெடிகுண்டு புரளி

கரூர் ஜவகர் பஜாரில் தலைமை தபால் நிலையம் உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மாலை 4.30 மணி அளவில் தபால் நிலையத்தில் உள்ள தொலை பேசி எண்ணை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். தொலைபேசியை தபால் அலுவலர் தங்கராஜ் எடுத்து பேசினார். அப்போது எதிர் முனையில் பேசியவர், தபால் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் 10 நிமிடத்தில் அது வெடித்து விடும். அனைவரும் வெளியில் சென்று விடுங்கள் என்று கூறினார். அதற்கு தங்கராஜ், நீங்கள் யார்? எங்கிருந்து பேசுகிறீர்கள்? என்று கேட்டதற்கு, போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுகிறோம் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்.

பின்னர் மீண்டும் 2 நிமிடம் கழித்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதே நபர், இன்னும் வெளியில் செல்லவில்லையா? 2 நிமிடத்தில் வெடிகுண்டு வெடித்து விடும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து தபால் நிலைய கண்காணிப்பாளர் ராமலிங்கத்திற்கு தங்கராஜ் தகவல் கொடுத்தார். பின்னர் அவர் கரூர் நகர போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் வந்து தீவிர சோதனை நடத்தினர்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

தபால் நிலைய பகுதி முழுவதும் சோதனை செய்தும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அப்போதுதான், தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. அதன்பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த வெடிகுண்டு புரளியால் தபால் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்