ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-01-19 00:06 GMT
மாமல்லபுரம்,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் போராட்டம் நடத்தினர்.

மறியல்

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே முகநூல் நண்பர்கள், வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், தனியார் என்ஜினீயரிங கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. கல்லூரி மாணவர்கள் சிலர் அரசு பஸ்களை மறிக்க முயன்றனர். உடனடியாக மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையில் சென்ற போலீசார் தடுப்புகளை அமைத்து சாலையில் வராதபடி மாணவர்களை ஒழுங்குபடுத்தினர். அப்படி இருந்தும் மாணவர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சிலர் காளை மாடுகளை அங்கு கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த மறியல் போராட்டம் சுமார் 5 மணி நேரம் நீடித்தது. போராட்டத்தில் மாமல்லபுரம் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ராஜசேகர், அரவிந்த், பாரூக் (முகநூல் நண்பர்கள்குழு), பிரேம்விசுவநாதன் (தி.மு.க.), தேவனேரி ஆறுமுகம்(பா.ம.க), இ.சி.ஆர்.அன்பு(விடுதலை சிறுத்தைகள் கட்சி) மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள தனியார் கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டியும் பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவ- மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து சிக்கராயபுரம் பஸ் நிறுத்தத்தில் எம்.ஜி.ஆர். சிலை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசு மற்றும் பீட்டா அமைப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே 300-க்கும் கல்லூரி மாணவ- மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தேரி பஸ்நிலையம் அருகே 100-க்கு மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்பாக்கம்

கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்