விழுப்புரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-01-18 23:33 GMT
ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பொது சேவை மைய பயன்பாட்டிற்காக பயோ மெட்ரிக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் விரல்ரேகை பதிவு செய்யும் கருவியை அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் வாங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அறிவித்தனர். இதற் காக இந்த கருவிகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.5,758 -க்கு காசோலை மூலம் பெற்று தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்த கருவியின் உண்மையான அடக்கவிலை ரூ.3,400-ம், வெளிச்சந்தையில் ரூ.2,500-க்கு வாங்க இயலும் என கூட்டுறவுத்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டினர். எனவே இந்த கருவியின் அடக்கவிலையை விட 2 மடங்கு கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ததாகவும், அவ்வாறு கூடுதலாக வாங்கப்பட்ட தொகையை திரும்ப வழங்கக்கோரியும் தமிழகம் முழுவதும் நேற்று தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு விரல்ரேகை பதிவு செய்யும் கருவிகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரத்தில்...

அதன்படி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்படும் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் திருநாவுகுமரேசன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் துளசிராமன், பொருளாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர்கள் ஸ்ரீராமலு, செந்தில்முருகன், இணை செயலாளர்கள் அனந்தசயனன், கோவிந்தராஜ், வடக்கு மண்டல துணைத்தலைவர் மூர்த்தி, விழுப்புரம் வட்ட தலைவர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கருவிகள் ஒப்படைப்பு

இந்த போராட்டத்தின் முடிவில், மாவட்டத்தில் உள்ள 237 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விரல்ரேகை பதிவு செய்யும் கருவியை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பிச்சென்றனர். 

மேலும் செய்திகள்