கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் 10 ஆயிரம் பேர் குவிந்ததால் திருச்சி ஸ்தம்பித்தது

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். 10 ஆயிரம் பேர் குவிந்ததால் திருச்சி ஸ்தம்பித்தது.

Update: 2017-01-18 22:44 GMT
திருச்சி,

மாணவர்கள் குவிந்தனர்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் 3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருச்சியிலும் பொங்கல் பண்டிகைக்கு முன்பே கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினமும் மாணவர்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று காலை அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்த திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு காலை 9.45 மணி அளவில் திரண்டனர். இதேபோல கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகேயும் மாணவ-மாணவிகள் குவிந்தனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த மாணவ-மாணவிகள் திரண்டு வர வேண்டும் என வாட்ஸ்-அப், முகநூல் (பேஸ்புக்), டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நேற்று முன்தினம் தகவல் பரப்பப்பட்டன. இதனால் திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் வகுப்பை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்த குவிந்தனர்.

தர்ணா போராட்டம்

மாணவ-மாணவிகள் குவிந்ததால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலகம் திரண்ட மாணவ-மாணவிகள் அனைவரும் கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே சென்று அங்குள்ள மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக போலீசாரிடம் கூறினர்.

இதையடுத்து மாணவ-மாணவிகள் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலக சாலை, வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, லாசன்ஸ் சாலை வழியாக கோர்ட்டு எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்தடைந்தனர். கோர்ட்டு அருகே தென்னூர் அண்ணாநகர் செல்லும் சாலையில் மாணவ-மாணவிகள் அனைவரும் நின்றனர். சில மாணவ-மாணவிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாகைகள்

மாணவ-மாணவிகள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். மேலும் தமிழர்களின் பெருமையை போற்றும் வகையிலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர். பறை அடித்தப்படியும் கோஷமிட்டனர். மாணவ-மாணவிகளின் போராட்டத்தால் கோர்ட்டு எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா அருகே போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டன. அந்த பகுதியே ஸ்தம்பித்தது. இரு சக்கர வாகனங்கள், பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வரிசையாக நின்றன.

வாகனங்கள் செல்ல வசதியை போலீசார் ஏற்படுத்திக்கொடுத்தனர். மேலும் மாணவர்கள் சாலையில் வந்து போராட்டம் நடத்தாமல் ஓரமாக நிற்க மாணவர்களிடம் போலீஸ் துணை கமிஷனர்கள் மயில்வாகனன், பிரபாகரன் ஆகியோர் அறிவுறுத்தினர். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் ஓரமாக நின்று போராட்டம் நடத்தினர். ஏராளமானோர் குவிந்ததால் அந்த பகுதியே பரபரப்பானது. சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் நின்று பார்த்துவிட்டு சென்றனர்.

ஊர்வலம்

இதற்கிடையில் சிந்தாமணி அண்ணாசிலை அருகேயும் கல்லூரி மாணவ-மாணவிகள் குவிந்தனர். தமிழர்களின் பாரம்பரியமான பறையை அடித்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின் கோர்ட்டு எம்.ஜி.ஆர்.சிலை அருகே போராட்டத்தில் பங்கேற்க மாணவ-மாணவிகள் ஊர்வலமாக புறப்பட்டனர். ஆனால் ஊர்வலமாக செல்ல போலீசார் தடை விதித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநகர போலீஸ் கமிஷனர் அருணிடம் ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்டனர்.

இதையடுத்து சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து தெப்பக்குளம் தபால் நிலையம், மெயின்கார்டுகேட், கே.டி.ஜங்ஷன் சந்திப்பு, தென்னூர் வழியாக கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தடைந்தனர். அங்கு ஏற்கனவே திரண்டு இருந்த மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய படியும், பதாகைகளை கையில் ஏந்திய படியும் சில மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக மாநகரை சுற்றி வலம் வந்தனர். மாணவர்களின் போராட்டத்திற்கு வக்கீல்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.

தண்ணீர் பாக்கெட்டுகள் வினியோகம்

திருச்சியில் மாணவ-மாணவிகள் எழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். மாணவர்கள் பெரும்பாலும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். இதேபோல மாணவிகளும் கருப்பு நிற உடைகளை அணிந்து பங்கேற்றனர்.

மாணவ-மாணவிகளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டன. மதியத்திற்கு மேல் பிஸ்கெட் பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டன. சில தன்னார்வலர்கள் மாணவர் களுக்கு உணவுகளை வினியோகித்தனர். மாணவ-மாணவிகள் வெயிலையும் பொருட்படுத்தாமல் மிகுந்த ஆவேசத்துடன் போராட்டத்தில் பங்கேற்றனர். காலையில் தொடங்கிய போராட்டம் மாலை 6 மணிக்கு மேலும் நீடித்தது.

திருச்சி ஸ்தம்பித்தது

போராட்டத்தில் பங்கேற்ற பல மாணவர்கள், எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவை சுற்றி நின்றனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வேன்களை மாணவர்கள் வழி ஏற்படுத்தி கொடுத்து அனுப்பி வைத்தனர். சாலையை விட்டு மாணவர்களை தள்ளி நிற்க போலீசார் அறிவுறுத்திய பின் போக்குவரத்து ஓரளவு சீரானது. எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா வழியாக தென்னூர் அண்ணாநகர் செல்லும் வாகனங்கள் அரசு மருத்துவமனை வழியாக திருப்பி விடப்பட்டன. மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள் 10 ஆயிரம் பேர் குவிந்ததால் திருச்சி ஸ்தம்பித்தது.

சமயபுரம்

இதேபோல திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டுச்சந்தை மைதானத்தில் போராட்டம் நடத்த கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று காலை 9 மணி அளவில் குவிந்தனர். நேரம் ஆக, ஆக மாணவ-மாணவிகள் வருகை எண்ணிக்கை அதிகரித்தது. பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் திருநங்கைகளும் கலந்து கொண்டனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மாணவ-மாணவிகளை பார்த்து கையசைத்தப்படி சென்றனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நுழைவுவாயில் முன்பு மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்