தேனியில், ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் தர்ணா போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தேனியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-18 21:18 GMT

தேனி,

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தேனியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும், மத்திய அரசு சிறப்பு சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேனியில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்றும் தேனியில் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த தகவல் அறிந்து மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் தேனி புதிய பஸ் நிலையத்தில், போராட்டத்திற்காக குவிந்தனர். காலை 8.30 மணியளவில் 20 மாணவர்களே புதிய பஸ் நிலையம் அருகில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நேரம் செல்லச் செல்ல, மாணவர்கள் அணி, அணியாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து குவியத் தொடங்கினர். காலை 11 மணியளவில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். புதிய பஸ் நிலையத்தில் உள்ள பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடலுக்கு இடையே உள்ள இடத்தில் மாணவர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டை நடத்த சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும், காளைகளை காப்பாற்ற வேண்டும், பண்பாட்டை சிதைக்கக்கூடாது என்பது போன்ற பல்வேறு வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகளை கையில் பிடித்தபடி அவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது மாணவர்கள் கண்டன கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

ஜல்லிக்கட்டு காளை

போராட்டம் நடந்த இடத்திற்கு ஜல்லிக்கட்டு காளை கொண்டு வரப்பட்டது. அந்த காளை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டி வைக்கப்பட்டது. மேலும், கிடா சண்டைக்கான ஆடுகள், சண்டை சேவல்கள் போன்றவையும் அங்கு கொண்டு வரப்பட்டன. போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் இலங்கேசுவரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் வந்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் கல்லூரி மாணவிகள் சிலரும், பொதுமக்களும் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோன்று, தேனி எஸ்.பி.ஐ. திடலில் வக்கீல்கள், மாணவர்கள், இளைஞர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதிலும் பலர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில், மாணவ–மாணவிகள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாணவ–மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 2 மணி நேரம் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆண்டிப்பட்டி

இதே போல் ஆண்டிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிப்பட்டி பஸ் நிலையம் அருகே நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், சிறப்பு சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும் கோ‌ஷங்களை எழுப்பினர். மேலும் பீட்டாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியகுளம்

பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான தென்கரை, மூன்றாந்தல் பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நகர தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதே போல், பெரியகுளம் தேவர் சிலை அருகிலும், வடகரை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகிலும் பீட்டா அமைப்பை கண்டித்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்ட துளிகள்

* தேனியில் மாணவர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தை தொடர்ந்து, அங்கு பாதுகாப்புக்காக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்மாவதி தலைமையில், 2 துணை சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக்டர்கள் உள்பட நூற்றுக்கணக்கான போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் குவிக்கப்பட்டனர். இருப்பினும் மாணவர்களே தங்களுக்குள் ஒரு குழுவை ஏற்படுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு சக மாணவர்களை ஒழுங்குபடுத்தினர். இதையடுத்து ஓரிரு போலீசாரை தவிர மற்றவர்கள் ஆங்காங்கே உள்ள மரத்தடி நிழலில் நின்றபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

* போராட்டம் நடந்து கொண்டு இருந்த போது நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சிலர் அவர்களின் இயக்க கொடியை பிடித்துக் கொண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷங்கள் எழுப்பியபடி அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த மாணவர்கள் ‘இது, கட்சிகள், அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு தமிழர் என்ற உணர்வோடு நடத்தப்படும் போராட்டம். கொடி பிடிக்காமல் ஆதரவு கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர். இதனால், கொடியை மடித்து வைத்து விட்டு, விஜய் ரசிகர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

* போராட்டம் நடந்த இடத்திற்கு தேனி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வந்தனர். மாணவர்களுக்கு தேவையான தண்ணீர், பிஸ்கட், உணவு போன்றவற்றை வழங்குவதாகவும், தங்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதன்படி, அவர்கள் ஆட்டோக்களில் உணவு, தண்ணீர், பிஸ்கட் போன்ற பொருட்களை அனுப்பி வைத்தனர்.

* ஒரு புறம் போராட்டம் நடந்து கொண்டிருக்க, மாணவர்கள் தண்ணீர் குடித்து விட்டு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை குப்பையாக ஆங்காங்கே வீசினர். இந்த பிளாஸ்டிக் குப்பைகளை பங்களாமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், ஒரு சாக்கில் சேகரித்து அப்புறப்படுத்தினார். அதை பார்த்த மாணவர்களும் அவரோடு இணைந்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.

மேலும் செய்திகள்