தூத்துக்குடி, கோவில்பட்டியில் கொளுத்தும் வெயிலில் மாணவர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தூத்துக்குடி, கோவில்பட்டியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்.

Update: 2017-01-18 21:00 GMT

தூத்துக்குடி,

ஜல்லிக்கட்டு பிரச்சினை

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் வாட்ஸ்அப் மூலம் போராட்ட அறிவிப்பை வெளியிட்ட இளைஞர்கள் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளிக்கூட மைதானம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பிறகு போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இளைஞர்கள் கலைந்து சென்றனர்.

2–வது நாள் போராட்டம்

நேற்று காலை முதல் 2–வது நாளாக இளைஞர்கள் எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் கொதிரண்டனர். தூத்துக்குடியில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பு 200–க்கும் மேற்பட்ட மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக எஸ்.ஏ.வி. பள்ளிக்கூட மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் கொளுத்தும் வெயிலில் மாணவ, மாணவிகள் கோ‌ஷங்களை எழுப்பியவாறு பங்கேற்றனர்.

மாணவர்கள் குவிந்தனர்

எஸ்.ஏ.வி. பள்ளிக்கூட மைதானத்தில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் குவிந்ததால் பரபரப்பு காணப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோ‌ஷம் எழுப்பினர். மதியம் வெயிலிலும் மாணவர்கள் மைதானத்தில் அமர்ந்து கோ‌ஷம் எழுப்பியபடி இருந்தனர். இந்த போராட்டத்தில் பேராசிரியை பாத்திமா பாபு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஞானசேகர் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்தனர். அப்பகுதியில் தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கோவில்பட்டி

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று காலையில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ மாணவிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு பதிலாக உள்நாட்டு குளிர்பானங்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கொளுத்தும் வெயிலில் அமர்ந்து..

.

மாணவ, மாணவிகள் கொளுத்தும் வெயிலில் சாலையோரம் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில மாணவர்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை சாலையில் ஊற்றி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அங்கு பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகளும் குவிந்தனர். இதனால் அங்கு சாமியானா பந்தல் அமைக்க மாணவர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்தனர். இதையடுத்து கொளுத்தும் வெயிலில் அனைவரும் சாலையோரம் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழர்களின் உணர்வுகளை புறக்கணிக்க கூடாது, தமிழ் எங்கள் அடையாளம், ஜல்லிக்கட்டு எங்கள் கலாசாரம், எனக்கு பால் தருவதால் பசுவும் என் தாய், என் தாயைக் காப்பாற்ற ஜல்லிக்கட்டு வேண்டும், நாங்கள் போராடுவது உங்கள் பிள்ளையின் பாலுக்கும் சோறுக்கும் சேர்த்து தான், உண்மை தமிழனாய் ஒன்றிணைவோம், வெற்றி காண்போம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு, மாணவ மாணவிகள் கோ‌ஷங்களை எழுப்பினர்.

கட்சியினருக்கு அனுமதி மறுப்பு

பின்னர் போலீசார் அனுமதி வழங்கியதை தொடர்ந்து மதியம் 2 மணியளவில் அங்கு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கும் வரையிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எந்த அரசியல் கட்சியினரையும் பங்கேற்க மாணவர்கள் அனுமதிக்கவில்லை.

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ் (மேற்கு), பவுல்ராஜ் (கிழக்கு), ஜூடி (நாலாட்டின்புத்தூர்) தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி

தூத்துக்குடி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் திருச்செந்தூர் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் முன்னிலை வகித்தார். இளம்புயல் பாசறை மாவட்ட செயலாளர் கடலரசு பாண்டியன் வரவேற்று பேசினார். மாநில மீனவர் அணி இணை செயலாளர் ரிச்சர்ட் தேவசகாயம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மணி, சகாயராஜா ஆகியோர் பேசினர். த.மு.மு.க. மேற்கு மண்டல பொருளாளர் சம்சுதின் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் இப்ராகிம், தூத்துக்குடி ஒன்றிய தலைவர் செல்லத்துரை, மாநகர செயலாளர் ஷேக், தலைவர் முத்துவாப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்