ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ – மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-18 21:00 GMT

திருவண்ணாமலை,

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ – மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணியில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரம்பரிய விளையாட்டு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மாடுவிடும் விழா போன்ற விளையாட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வகுப்பு புறக்கணிப்பு

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் நேற்று இந்திய மாணவர் சங்க திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் அன்பரசன், மாநில குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில், கல்லூரி மாணவ – மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

பின்னர் கல்லூரி முன்பு மாணவ – மாணவிகள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 400–க்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டாகும். தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். தற்போது பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் முடிந்தாலும் தை மாத இறுதிக்குள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்’ என்றனர்.

உண்ணாவிரத போராட்டம்

திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒருபுறம் நடைபெற, திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலம் முன்பு திருவண்ணாமலை நகர இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். உண்ணாவிரத போராட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் 300–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கோ‌ஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, மு.பெ.கிரி ஆகியோர் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

போராட்டத்தை யொட்டி திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு நான்கு வழிச்சாலை காமராஜர் சிலை அருகே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி

ஆரணி அண்ணாசிலை அருகே நேற்று காலையில் ஆரணி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் இந்த பகுதியில் 10–க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் வங்கிகள் திறப்பதால் பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள்.

இந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் வங்கிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு பெரிதும் சிரமம் ஏற்படும். எனவே, கோட்டை மைதானத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் என்று போலீசார் கூறினர். இதனையடுத்து மாணவர்கள் காந்திரோடு, மார்க்கெட் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று கோட்டை மைதானத்திற்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்ல செல்ல பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம், புதிய நீதிகட்சி, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் அங்கு திரண்டனர்.

வாலிபர் தீக்குளிக்க முயற்சி

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சிவானந்தம் பேசினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதுகட்சி போராட்டம் அல்ல, இது மாணவர்களின் போராட்டம் என்று கூறினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.வை திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆரணி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த இப்ராஹிம் (22) என்பவர் திடீரென உடலில் மண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தச்சூர் மற்றும் இரும்பேட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கல்லூரிக்கு செல்லாமல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோட்டை மைதானத்துக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

செய்யாறு

செய்யாறு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் அங்கேயே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்