இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Update: 2017-01-17 21:36 GMT
பள்ளிப்பட்டு,

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொம்மராஜுப்பேட்டை கிராமம் குட்டை தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் பிரியா (வயது 20) என்பவருக்கும், அதே தெருவில் வசித்து வரும் மணிவண்ணன் (25) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன மாதம் 30-ந் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு அர்ஷா என்ற 1½ வயது மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரியாவின் செல்போனுக்கு வேறு ஒரு நபரிடம் இருந்து அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.

அன்று முதல் பிரியா மீது மணிவண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மணிவண்ணனின் பெற்றோரும் பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த பிரியா சில நாட்களுக்கு முன்னர் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி பிரியா தனது தாய் வீட்டில் இருந்தபோது தன்னுடைய உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பிரியா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து பிரியாவின் தந்தை பெருமாள் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

திருமணம் முடிந்து 2½ ஆண்டுகளில் பிரியா தற்கொலை செய்து கொண்டதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. விமல்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்