இரவிலும் போராட்டம் தொடர்ந்தது மெரினாவில் திடீரென்று மின்சாரம் துண்டிப்பு செல்போன் வெளிச்சத்தில் போராடிய இளைஞர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை முதல் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-01-17 22:30 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை முதல் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் போராட்டம் மாலையை கடந்து இரவிலும் நீடித்தது.

நேரம் செல்ல, செல்ல மெரினா கடற்கரையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போலீசார் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிட போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் போலீசார் தவித்தனர்.

இதற்கிடையே மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெறும் இடத்தில் உள்ள மின் கம்பங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போராட்டக்களத்தில் இருள் சூழ்ந்த போதிலும், போராட்டக்காரர்கள் தங்கள் வைத்திருந்த செல்போன் வெளிச்சத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் செல்போன்களை கைகளில் பிடித்து, வெளிச்சத்தை காட்டியதால் இருள் விலகி, ஒளி தென்பட்டது. போராட்டக்காரர்களின் எதிர்ப்பை தொடர்ந்து சிறிது நேரத்தில் மின் சப்ளை செய்யப்பட்டது.

‘தமிழ்நாட்டில் தமிழனை வாழ விடு, தமிழ் கலாசாரத்தை அழித்து விடாதே’ என்று அவர்கள் அவ்வப்போது கோஷமிட்டபடியே இருந்தனர். அவர்கள் போராட்டம் நேற்று இரவு 9 மணியை தாண்டியும் நீடித்தது. உணவு சாப்பிடாமலும், தண்ணீர் அருந்தாமலும் அவர்கள் போராடியது மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்தது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் தொழில் பூங்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் தான்.

‘தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சி தலைவர்களுமே தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டனர். எனவே ஜல்லிக்கட்டுக்காக நாங்களே களத்தில் இறங்கி விட்டோம்’ என்று இளைஞர்கள் மிகவும் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

ஆதரவு தெரிவிக்க வந்த சில அரசியல் கட்சி தலைவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் திருப்பி அனுப்பிய சம்பவமும் நடந்தது. 

மேலும் செய்திகள்