கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு இளைஞர்கள் முற்றுகை போராட்டம்

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு இளைஞர்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-17 22:15 GMT
ஜல்லிக்கட்டு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்க அனுமதி கிடைக்காததால் தமிழகமெங்கும் இளைஞர்கள் வெகுண்டெழுந்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரிலும் இளைஞர்களும், மாணவர்களும் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை சுமார் 22 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், இளைஞர்களையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால் அவர்களை விடுவிக்கக்கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

கடலூர் அம்பேத்கர் சிலை அருகில் இளைஞர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தப் போவதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு வந்தனர். இந்த நிலையில் மதியம் அங்கு திரண்டு வந்த இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு விடாத படி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆனால் போலீஸ் பாதுகாப்பையும் மீறி இளைஞர்கள் நாம்தமிழர்கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் தலைமையில் கலெக்டர் முகாம் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்கள் தங்கள் கைகளில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை பிடித்த படி கோஷங்களை முழங்கிய படி சென்று கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

முற்றுகை போராட்டம்

இதனால் கலெக்டர் முகாம் அலுவலகத்தின் பிரதான வாசல் கதவை போலீசார் இழுத்து மூடி அரண் போல நின்று கொண்டனர். அங்கு தரையில் அமர்ந்திருந்த இளைஞர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், பீட்டாவுக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் கண்டன கோஷங் களை முழங்கினார்கள். இதையடுத்து அவர்களை கைது செய்வதற்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இளைஞர்களை கைது செய்வதாக கூறிய துணைபோலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன், அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு கூறினார். ஆனால் இளைஞர்களோ ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க வலியுறுத்தியும், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க கோரியும் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவே வந்தோம் என்று கூறியபடி கைதாகாமல் கலைந்து சென்றனர். இளைஞர்களின் ஆவேசமான போராட்டத்தினால் கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு சுமார் அரை மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. 

மேலும் செய்திகள்