சேத்தூர் பகுதியில் காட்டு பன்றி, மயில்களால் நெற்பயிர் நாசம்
சேத்தூர் பகுதியில் காட்டுப் பன்றிகள் மற்றும் மயில்கள் விளைந்த நிலையில் இருந்த நெற் பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. இதனால் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 150 ஏக்கர் ராஜபாளையம் அருகே சேத்தூர் நச்சாடை பேரி கண்
ராஜபாளையம்,
சேத்தூர் பகுதியில் காட்டுப் பன்றிகள் மற்றும் மயில்கள் விளைந்த நிலையில் இருந்த நெற் பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. இதனால் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
150 ஏக்கர்ராஜபாளையம் அருகே சேத்தூர் நச்சாடை பேரி கண்மாயை சுற்றிலும் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் சேத்தூர், முகவூர், முத்துசாமிபுரம், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 10–க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். பருவ மழையை நம்பி கடந்த ஐப்பசி மாதம் நெல் நடவு செய்து பராமரித்து வந்தனர். பருவ மழை பொய்த்ததால் கண்மாய் முழுவதுமாக வறண்டு காணப்படுகிறது. எனவே கிணற்று நீரை நம்பி பயிர்களை வளர்த்து வந்தனர்.
கடந்த வாரத்திலிருந்து நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டதால் 80 நாட்களாக வளர்த்து வந்த பயிர்கள் தற்போது கருகி வருகின்றன. இந் நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வரும் காட்டுப் பன்றிகள் மற்றும் மயில் கூட்டம், விளைந்த நிலையில் இருக்கும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. பன்றிகள் பயிர்களை பிய்த்தும், மயில்கள் நெல்மணிகளை உண்டும் சேதப்படுத்தி வருகிறது.
வேதனை
ராஜபாளையம் பெரிய கடை பஜார் தெருவை சேர்ந்த பீமராஜா என்பவர் 10 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிட்டு இருந்தார். பல சிரமத்திற்கிடையே வளர்க்கப் பட்ட நிலையில் தற்போது வயலில் உள்ள பெரும்பாலான பயிர்களில் நெல் மணிகள் இல்லாமல் காணப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இரவு நேரத்தில் காவலர்கள் இருந்தும், அவர்களை மீறி பன்றிகளும், மயில்களும் பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி விட்டது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, வன விலங்குகள் விவசாய காடுகளுக்கு வராத வண்ணம் வனத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுவரை சேதப்படுத்தப் பட்ட பயிர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.