நிலக்கோட்டை அருகே விபத்து: தண்ணீர் லாரி மோதி மாணவன் பலி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். அவருடைய மகன் அருண்குமார் (வயது 19). வத்தலக்குண்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் மற்றும் அவருடைய நண்பர்களான சுவைத் (
நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். அவருடைய மகன் அருண்குமார் (வயது 19). வத்தலக்குண்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் மற்றும் அவருடைய நண்பர்களான சுவைத் (19), சக்திராமு (20), விக்னேஷ் (19), சுபாஷ் (18), ராஜபாண்டி (18) ஆகியோருடன் அணைப்பட்டி அருகே உள்ள நாட்டார்பட்டிக்கு கைப்பந்து விளையாட 2 மோட்டார் சைக்கிள்களில் சென்றனர்.
சொக்குப்பிள்ளைப்பட்டி பகுதியில் அவர்கள் சென்றபோது, எதிரே விளாம்பட்டியில் இருந்து அணைப்பட்டி நோக்கி சென்ற தண்ணீர் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள்களின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அருண்குமார் உள்பட 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.