மலைப்பகுதியில் நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

கிருஷ்ணகிரி அருகே மலைப்பகுதியில் நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-17 23:00 GMT
கிருஷ்ணகிரி,

மலைப்பகுதியில் சோதனை

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் மேற்பார்வையில், கிருஷ்ணகிரி மாவட்ட நக்சலைட்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் 14 பேர் கொண்ட குழுவினர் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலகம் அருகில் உள்ள தாளப்பள்ளி மலைப்பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்கள் மலைப்பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நபர்கள் சுற்றுகிறார்களா? என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் மாலை வரை இந்த சோதனை நடைபெற்றது.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறியதாவது:-

சோதனை தீவிரப்படுத்தப்படும்

குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக மலைப்பகுதியில் யாரேனும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் உள்ளார்களா? என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதே போல இனி வரும் நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில எல்லையில் உள்ள கும்ளாபுரம், அந்திவாடி, ஜூஜூவாடி, குருவிநாயனப்பள்ளி உள்ளிட்ட 9 சோதனைச்சாவடிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்