தூத்துக்குடி அருகே குடிநீர் கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

தூத்துக்குடி அருகே குடிநீர் கேட்டு மாநகராட்சி தென்மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

Update: 2017-01-17 21:00 GMT

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே குடிநீர் கேட்டு மாநகராட்சி தென்மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி 53–வது வார்டுக்கு உட்பட்ட முத்தையாபுரம் வடக்கு தெருவில், கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். நேற்று காலையில் அந்த பகுதி மக்கள் காலி குடங்களுடன் முத்தையாபுரம் ஜே.எஸ். நகரில் உள்ள மாநகராட்சியின் தென்மண்டல அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி அலுவலகத்துக்கு முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்க கோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

20 நாட்களாக பிரச்சினை

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும் போது, எங்கள் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. பொங்கலுக்காவது குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் அன்றும் தண்ணீர் வழங்கவில்லை. விலைக்கு தண்ணீர் வாங்கி தான் நாங்கள் பொங்கலை கொண்டாடினோம். எங்களுக்கு உடனடியாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதிகாரி சமாதானம்

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி செயற்பொறியாளர் காந்திமதி அங்கு வந்தார். அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது 2 நாட்களில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். அதன் பேரில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்