வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர்.

Update: 2017-01-16 23:00 GMT
திருச்சி,

பொங்கல் விழா

தமிழக சுற்றுலாத்துறை சார்பில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக திருச்சி மாவட்டத்தில் பல்வேறு ஓட்டல்களில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் மேலூர் கிராமத்துக்கு சிறப்பு பஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மெயின்ரோட்டில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டிகளில் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு மாலை அணிவித்து, திலகமிட்டு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட கலெக்டர் பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர். அதன்பிறகு கிராமத்து பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது. சிறந்த கோலங்கள் இட்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வெளிநாட்டு பயணிகள்

ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நெதர்லாந்து, நிக்கோடா(சிரியா), அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப்பயணிகள் கலந்து கொண்டனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹென்றி தமிழில் பேசுகையில், “புத்தகம் வாசிக்கும் பழக்கம் மூலம் தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் பெருமைகளை தெரிந்து கொண்டேன். தமிழ் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழகம் வந்தேன். தமிழில் பி.ஏ.பட்டம் பெற்று விட்டேன். தற்போது எம்.ஏ., படித்து வருகிறேன். தமிழக கிராமங்கள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன” என்றார்.

அமெரிக்கா சேர்ந்த வின்சென்ட் கூறுகையில், “40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனினும் என்னால் தமிழில் பேசமுடியவில்லை. தமிழ் நாடும், பொங்கல் விழாவும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது” என்றார். சிரியாவை சேர்ந்த லிபி பேசும்போது, “இத்தகைய விழாவில் கலந்து கொள்வது பெருமையாக உள்ளது. இங்குள்ள சிறுவர், சிறுமியர் மிகவும் பாசமாக உள்ளனர்” என்றார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ரூ.2½ கோடியில் சாலை வசதி

சுற்றுலா துறையின் சார்பில், திருச்சி மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா முதல் முக்கொம்பு வரை ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் சாலை வசதிக்காக திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். வீரப்பூர் கோவிலில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்கதர்களின் வசதிக்காக 1 கோடி செலவில் கோவிலை சுற்றி மேம்பாட்டு பணிகள் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். மணியங்குறிச்சி மற்றும் திருப்பஞ்சீலி ஆகிய கோவில்களில் ரூ.1 கோடி செலவில் ஒளி விளக்கு செய்வதற்கு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அப்போது சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழாவில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன், மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோவன், வனச்சரகர் கருணாநிதி, ஸ்ரீரங்கம் தாசில்தார் சண்முகராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்