கால்நடை டாக்டர் வீடு புகுந்து 60 பவுன் நகைகள்- பணம் கொள்ளை

பாவூர்சத்திரத்தில் கால்நடை டாக்டர் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு வீடு புகுந்து சுமார் 60 பவுன் தங்க நகைகளையும், பணத்தையும் மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

Update: 2017-01-16 23:00 GMT
பாவூர்சத்திரம்,

கால்நடை டாக்டர்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 56). கால்நடை டாக்டரான இவரது வீடு அங்குள்ள ரெயில்வே கேட் பகுதியில் உள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நடுவூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் துணை இயக்குனராக ராமசாமி தற்போது வேலை பார்த்து வருகிறார்.

பாவூர்சத்திரத்தில் உள்ள வீட்டில் அவருடைய மனைவி சரசுவதி வசித்து வந்தார். இவர்களுடைய மகள் திருமணமாகி சென்னையில் வசிக்கிறார். கடந்த 13-ந் தேதி சரசுவதி, வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.

60 பவுன் நகைகள் கொள்ளை

நேற்று முன்தினம் மாலையில் அவர் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு சரசுவதி அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே இருந்த 2 இரும்பு பீரோக்கள் மற்றும் மர பீரோ ஆகியவை திறந்து கிடந்தன. அவற்றில் இருந்த 60 பவுன் தங்க நகைகளும், ரூ.5 ஆயிரமும் கொள்ளை போனது தெரிய வந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

கால்நடை டாக்டர் ராமசாமியின் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கு இருந்த தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் என்று தெரிகிறது.

வலைவீச்சு

இது சம்பந்தமாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பாவூர்சத்திரத்தில் கால்நடை டாக்டர் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்