பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

தட்டார்மடம் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.

Update: 2017-01-16 20:42 GMT
தட்டார்மடம்,

கல்லூரி மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள். இளைய மகன் கோகுல்ராஜ் (வயது 21), திசையன்விளையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் மகன் அருண்குமார் (22). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஓட்டல் மேலாண்மை, கேட்டரிங் படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள். அருண்குமார், பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து இருந்தார்.

பஸ் மோதியது

நேற்று மாலையில் கோகுல்ராஜ், அருண்குமார் ஆகிய 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தனர். கோகுல்ராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். தட்டார்மடம் அருகே பூச்சிக்காடு பகுதியில் உள்ள தனியார் மரைன் கல்லூரி அருகில் சென்றபோது, எதிரே திசையன்விளையில் இருந்து சென்னைக்கு சென்ற தனியார் ஆம்னி பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கோகுல்ராஜ், அருண்குமார் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 2 பேரையும் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கோகுல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆஸ்பத்திரியில் சாவு

படுகாயம் அடைந்த அருண்குமாருக்கு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து நிகழ்ந்ததும் ஆம்னி பஸ்சை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான டிரைவரை தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்