காட்டெருமை தாக்கி மூதாட்டி படுகாயம் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது

குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி மூதாட்டி படுகாயம் அடைந்தார். இதையொட்டி அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். காட்டெருமை தாக்கியது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அட்டடியை சேர்ந்தவர் கமலம் (வயது 75). இவர் நேற்று தனது

Update: 2017-01-16 22:00 GMT
காட்டெருமை தாக்கியது

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அட்டடியை சேர்ந்தவர் கமலம் (வயது 75). இவர் நேற்று தனது வீட்டுக்கு முன்புறம் வாசலில் அமர்ந்து இருந்தார். அப்போது அருகில் இருந்த தேயிலை தோட்டத்தில் இருந்து ஒரு காட்டெருமை வெளியே வந்தது.,

அந்த காட்டெருமை வீட்டு வாசலில் இருந்த கமலத்தை நோக்கி சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கமலம் எழுந்து ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காட்டெருமை அவரை தாக்கியது. இதனால் அவர் அலறினார். இதனால் அங்கு வந்த பொதுமக்கள், சத்தம் போட்டு காட்டெருமையை விரட்டினார்கள்.

சிகிச்சை

தொடர்ந்து காட்டெருமையை தாக்கியதில் படுகாயம் அடைந்த கமலத்தை மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே காட்டெருமை ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும், காட்டெருமை தாக்கிய மூதாட்டிக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள் திடீரென்று குன்னூர்– கோத்தகிரி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

50 பேர் கைது

இது குறித்து தகவல் அறிந்து வந்த மேல் குன்னூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்ததாக தெரிகிறது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்