பழனி அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு
பழனி அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பெரியகலையம்புத்தூரில் ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவில், நடுத்தெரு, கிழக்குத்தெரு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவது வழக்கம். இதனிடையே ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் காளை வளர்ப்பவர்கள், மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்தநிலையில் தடையை மீறி பெரியகலையம்புத்தூரில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பெருமாள்புதூர், கரிக்காரன்புதூர், காவலப்பட்டி, ஒட்டனைப்புதூர், வேலாயுதம்பாளையம்புதூர், கரடிக்கூட்டம், அய்யம்பாளையம், நெய்க்காரபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்பட்ட 10–க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
சீறி பாய்ந்த காளைகள்சுமார் 50–க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் அங்கு வந்தனர். ரகசியமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதில் இருந்து வெளியேறிய காளைகள் சீறி பாய்ந்தன. அந்த காளைகளின் திமிலை பிடித்து, மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள், மாடு பிடி வீரர்களை பந்தாடியது.
இதுபற்றி தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே ஜல்லிக்கட்டை முடித்து விட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். தடையை மீறி பெரியகலையம்புத்தூரில் ஜல்லிக்கட்டு நடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.