திண்டுக்கல் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்திய பொதுமக்கள்

திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டி, அ.வெள்ளோட்டில் தடையை மீறி பொதுமக்கள் மஞ்சுவிரட்டு நடத்தினர்.

Update: 2017-01-16 22:00 GMT

உழவர் திருநாள்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் தடையை மீறி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் உழவர் திருநாளையொட்டி வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளுக்கு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டி காளியம்மன், பகவதியம்மன், மாரியம்மன் கோவிலில் ஊர்பொதுமக்கள் சார்பில் பூஜை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன.

தடையை மீறி மஞ்சுவிரட்டு

அப்போது வீடுகளில் வளர்க்கப்படும் சுமார் 30 ஆடுகள், 80 பசு மாடுகள் மற்றும் 4 ஜல்லிக்கட்டு காளைகள் ஆகியவற்றை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதலில் ஆடு, பசுமாடுகளை தெருவில் அவிழ்த்து விட்டனர். பின்னர் திடீரென தடையை மீறி ஜல்லிக்கட்டு காளைகளின் கயிற்றையும் அவிழ்த்து ஓடவிட்டு மஞ்சுவிரட்டு நடத்தினர்.

அதனை இளைஞர்கள் தெருக்களில் விரட்டி பிடித்தனர். இந்த மஞ்சுவிரட்டு நடந்தபோது அங்கு போலீசார் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல அ.வெள்ளோடு பகுதிகளில் உள்ள ஆடு, பசுமாடு மற்றும் கோழிகளை அம்மன் கோவில் முன்பு பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் அனைத்து கால்நடைகளுக்கும் சிறப்பு பூஜை செய்து தீர்த்தம் தெளிக்கப்பட்டதும், பசுமாடு, கோழி, ஆடுகளை உரிமையாளர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

ஊர்வலம்

இதன் பின்னர் காளைகளுக்கான மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் 30– க்கும் மேற்பட்ட காளைகள் விடப்பட்டன. அப்போது சில காளைகள் மிரண்டு கூட்டத்திற்குள் புகுந்து ஓடியது. இப்படி ஓடிய காளைகளை அங்கு கூடியிருந்த இளைஞர்கள் அடக்கி பிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். இந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

இதற்கிடையே நேற்று திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவிலுக்கு பசுமாடு, மாட்டுவண்டி மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் என மொத்தம் சுமார் 12 மாடுகள் அழைத்து வரப்பட்டன. பின்னர் அங்கு மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புனித நீர் ஊற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அவற்றின் உரிமையாளர்கள் மாடுகளை ஊர்வலமாக வீடுகளுக்கு கொண்டு சென்றனர். இதையொட்டி அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்