‘கருணை அடிப்படையில் ஒருமுறை தான் வேலை வழங்க முடியும்’

தஞ்சாவூரை சேர்ந்தவர் பால்ராஜ். வேளாண்மைதுறையில் பணியாற்றி வந்தார்.

Update: 2017-01-16 22:30 GMT

மதுரை,

தஞ்சாவூரை சேர்ந்தவர் பால்ராஜ். வேளாண்மைதுறையில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் உடல்நலக்குறைவால் கடந்த 2002–ம் ஆண்டு இறந்தார். இதனால் கருணை அடிப்படையில் தன்னுடைய 3–வது மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பால்ராஜின் மனைவி தமிழ்மதி வேளாண்மைதுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். அதன்பேரில் அவருடைய மகளுக்கு 2014–ம் ஆண்டு அரசு வேலை கிடைத்தது.6 மாதம் மட்டுமே வேலை பார்த்த அந்த பெண், குடும்ப பிரச்சினை காரணமாக வேலையை ராஜினாமா செய்தார். அதன்பின்பு தன்னுடைய 6–வது மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று மீண்டும் தமிழ்மதி மனு கொடுத்தார். ஆனால் அதிகாரிகளோ, அவரது மனுவை நிராகரித்து விட்டனர்.

இதனையடுத்து அதிகாரிகளின் உத்தரவை ரத்து செய்து தனது 6–வது மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

“மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக கருணை அடிப்படையில் வேலை வழங்கி உள்ளனர். ஆனால் சொந்த பிரச்சினையின் காரணமாக மனுதாரரின் மகள் அரசு வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். கருணை அடிப்படையில் ஒருமுறை தான் வேலை வழங்க முடியும். அடுத்து வருபவர்களுக்கும் வேலை கொடுக்க, அது தொடர் ஓட்டப்பந்தயம் கிடையாது. மனுதாரரின் கோரிக்கையை வேளாண்மை துறை அதிகாரிகள் ரத்து செய்தது சரி தான். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.”

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்